Aran Sei

கோவை தேவாலயத்தின் புனிதர் செபாஸ்டியரின் சிலையை உடைத்த மர்ம நபர்கள் – காவல்துறை விசாரணை

கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் பகுதியில் டிரினிட்டி ஹோலி தேவாலயத்தில் நுழைவாயில் அருகே வைக்கப்பட்டிருந்த புனிதர் செபாஸ்டியரின் சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

நேற்று (ஜனவரி 23) தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோவையின் மலையாள மொழி பேசும் கிருஸ்துவ மக்கள் வழிபடும் டிரினிட்டி ஹோலி தேவாலயத்தில் வழிபாடு எதுவும் நடத்தப்படவில்லை. பொதுமக்கள் நடமாட்டமில்லாத அந்த நாளில் தேவாலயத்தில் செக்யூரிட்டி ஜான்சன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 23 இரவு 10 மணி அளவில் தேவாலய வளாகத்தில் கண்ணாடி உடைக்கும் சத்தம் கேட்டு ஜான்சன் சென்று பார்த்துள்ளார். அப்போது தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் தேவாலயத்தில் நுழைவாயில் அருகே வைக்கப்பட்டிருந்த புனித செபாஸ்டியரின் சிலையைக் கட்டையால் உடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார்.

ஜான்சனின் சத்தம் கேட்டுத் தேவாலயத்தின் பாதிரியார் வருவதற்குள் அந்த மர்ம நபர், இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் ஏறித் தப்பினார். இதில் செபாஸ்டியர் சிலை மற்றும் அதனைச்சுற்றி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளது.

தேவாலயத்தின் பாதிரியார் ஜோசப் அளித்த புகாரின் பேரில் கோவை ராமநாதபுரம் காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் கோவை வெள்ளளூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதே மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் புனிதர் செபாஸ்டியரின் சிலையை உடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்