மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அங்கிருந்து அகதிகளாக எல்லை கடந்து இந்தியா வந்திருக்கும் அந்நாட்டு அதிகாரிகளைத் திரும்ப அனுப்புமாறு, மியான்மர் அதிகாரிகள் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளதாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1 ஆம் தேதி, மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு, ஆர்பாட்டக்காரர்களின் மீதான ராணுவத்தின் வன்முறை செயல்களால் 12 பேர் உயிரிழந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கும் நிலையில், மியான்மர் காவல்துறையை சேர்ந்த 30 பேர், தங்கள் குடும்பத்துடன் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
எல்லை கடந்து அகதிகளாக வந்திருக்கும் 8 அதிகாரிகளைத் திரும்ப அனுப்புமாறு, மியான்மரின் ஃபாலம் மாவட்டத்தின் அதிகாரியிடமிருந்து தனக்கு கடிதம் வந்திருப்பதாக, இந்தியாவின் மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தின் இணை ஆணையர் மரியா சி.டி.சுவாலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இந்திய உள்துறை அமைச்சகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து, ராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிரான ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதாக சமூக ஊடங்களில் காவல்துறையினர் கூறியிருந்த நிலையில், அதிகாரிகள் அகதிகளாக எல்லை கடந்து இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
”இரண்டு நாடுகளுடனான நட்புறவை நிலைநிறுத்துவதற்காக, இந்திய எல்லைகளுக்குள் வந்திருக்கும் 8 காவலர்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என அந்தக் கடித்ததில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
இது தொடர்பான கேள்விகளுக்கு இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்னும் பதிலளிக்கவில்லை
Source : Reuters
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.