உத்திரபிரதேச மாநில கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலின் பாதுகாப்பு திட்டத்திற்காக, கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் 12 இஸ்லாமிய குடும்பங்கள், அவர்களுது வீடுகளை காலி செய்ய அம்மாநில அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
மாநில அரசின் அழுத்தால் அந்தக் குடும்பங்கள் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், முழுமையான தகவல் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மாவட்ட நிர்வாகம், ”பாதுகாப்பு திட்டம் இன்னும் ஆரம்பநிலையில் தான் உள்ளது. இதற்காக யாருக்கும் அழுத்தம் அளிக்கப்படவில்லை. அனைத்து குடும்பங்களும் எந்த அழுத்தமும் இல்லாமல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட குடும்பத்தினர் பயத்துடனும், கவலையுடனும் இருக்கின்றனர் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் செல்போன்களை அணைத்து வைத்துள்ளனர் அல்லது அழைப்புகளை எடுப்பதில்லை என்றும் தி வயர் கூறியுள்ளது.
ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ள குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர், “மாவட்ட தலைமையகத்தின் அதிகாரிகள் இடத்தைப் பார்வையிட்டுச் சொத்துக்களை அளவிட்டுச் சென்றனர். வீட்டைக் கையகப்படுத்துவது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறினர். ஆனால் எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வந்த பிறகே முழு தகவலையும் தெரிவிக்க முடியும்” என கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 28 ஆம் தேதி அந்த ஒப்புதல் கடிதத்தின் நகல் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதை அடுத்து பேசு பொருளானது. அந்தக் கடிதத்தில், “கோரக்பூர் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டத்தின் பகுதியாக கோவில் பகுதியில் காவல்துறையினரை நிறுத்துவது என மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசின் முடிவுக்கு இணங்கி கோவிலுக்கு தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள பழைய கோரக்பூர் பகுதியில் உள்ள தப்பா, கஸ்பா பர்கானா ஹவேலி மற்றும் கோரக்பூரில் உள்ள தாலுகா சதர் ஜன்பத் ஆகிய கிராமத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட குடியிருப்பாளர்களான எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் மற்றும் வீடுகளை அரசுக்கு மாற்ற ஒப்புக்கொண்டுள்ளோம். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்கள் ஒப்புதலுக்கு கீழே உள்ள கையெழுத்தை பார்க்கவும்” என எழுதப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தில் 11 குடும்பங்களை சேர்ந்த 19 பேர்களின் பெயர், தந்தையின் பெயர், செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. கடைசி பத்தியில் தேதியுடன் கூடிய அவர்களது கையொப்பம் இடம்பெற்றிருந்தது. மேலும், கடிதத்தில் எந்த ஒரு அதிகாரியின் பெயரோ, கையொப்பமோ அல்லது முத்திரையோ இடம்பெறவில்லை.
இது தொடர்பாக மாவட்ட நீதிபதி விஜயேந்திர பாண்டியனை தொடர்பு கொண்டபோது, அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (என்.எஸ்.ஏ) கீழ் வழக்கு பதியப்படும் என மிரட்டியதாக இந்தியா டுமாரோ என்ற இணையதளத்தை சேர்ந்த ஊடகவியலாளர் மசிஹுசாமா அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், “கோரக்பூரில் கோரக்நாத் கோயிலை ஒட்டியுள்ள வீடுகளை காலி செய்யுமாறு இஸ்லாமிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் தொடர்பாக மாவட்ட நீதிபதியுடன் பேச முயன்றபோது, நான் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டேன், வதந்திகளை பரப்புவதாக என்மீது என்.எஸ்.ஏ.வின் கீழ் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அச்சுறுத்தப்பட்டேன். இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஜூன் 3 ஆம் தேதி, ஊடகவியலாளருக்கும் மாவட்ட நீதிபதிக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் ஆடியோவை வெளியிட்டுள்ள காங்கிரஸ் சிறுபான்மை பிரிவின் மாநில தலைவர் ஷாநவாஸ் ஆலம், ”கோரக்நாத் கோவிலின் தென்கிழக்கு மூலையில் 125 ஆண்டுகளாக அங்குக் குடியேறியுள்ள இஸ்லாமிய குடும்பங்களை நிலத்தைக் காலி செய்யுமாறு கோரி ஒப்புதல் கடிதத்தில் நிர்வாகம் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பத்திரிகையாளர்களிடம் பேசும்போது அதை பதிவு செய்துள்ளன.” என தெரிவித்துள்ளதாக தி வயர் கூறியுள்ளது.
“பாதிக்கப்பட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு பதிலாக ஒப்பந்ததில் வலுக்கட்டாயமாக கையெழுத்திடுமாறு மாவட்ட நீதிபதி வற்புறுத்துகிறார். மேலும், இது தொடர்பாக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள்மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படும் என்று மிரட்டுகிறார்” என அவர் குற்றம்சாட்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிபதியைப் பணியிடை நீக்கம் செய்தவோடு, உடனடியாக இந்த விசயத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ள ஷாநவாஸ் ஆலம், ”முதலமைச்சர் தனது பதவியின் கண்ணியத்தையும், மாபெரும் துறவி கோரக்நாத் அவர்களின் கண்ணியத்தையும் மனதில் கொண்டு இது போன்ற ஒழுக்கக்கேடான மற்றும் ஜனநாயக விரோதப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது” என கூறியதாக தி வயர் செய்தி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கோரக்நாத் கோயிலைச் சுற்றியுள்ள உத்தேச பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இந்த நோக்கத்திற்காக தேவையான நிலத்தின் அளவு மற்றும் இருப்பிடம் குறித்து எந்த உறுதியான தகவலையும் வழங்க நிர்வாகம் தவறிவிட்டது என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.