Aran Sei

முனாவர் ஃபாரூக்கிக்கு ஆதரவாக சர்வதேச கலைஞர்கள் – வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை

நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃபாருக்கி மற்றும் அவருடைய நண்பர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று, சர்வதேச கலைஞர்கள் உட்பட 110 கலைஞர்கள்  கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கலைஞர்கள் மீதான இந்த துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், எந்தவொரு உண்மையான ஜனநாயகத்திலும், கலைஞர்கள் தங்கள் காலத்தைப் பற்றி கருத்து தெரிவிக்க தங்கள் கலையைப் பயன்படுத்த உரிமை உண்டு என்றும் அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்து கடவுள்கள் குறித்து அநாகரீகமான கருத்துக்களை தெரிவித்ததாக, பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகன், முனாவர் ஃபாரூக்கியின் மீது காவல்துறையில் புகாரளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை, முனாவர் ஃபாருக்கி உட்பட 4 நகைச்சுவை கலைஞர்களை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கைது செய்தது.

அமித்ஷாவை பகடி செய்து கைதான நகைச்சுவை நடிகர் – பிணை மறுத்த நீதிமன்றம்

இதையடுத்து ஜாமீன் கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் முனாவர் ஃபாருக்கி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மூன்று முறை நிராகரிக்கப்பட்டதால், அவர் கடந்த ஒரு மாதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இறுதியாக, கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்

இந்நிலையில், நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாரூக்கி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு, சர்வதேச கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் இந்தியாவில் கருத்து  சுதந்திரத்திக்கு எதிரான தாக்குதல் என அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

’சிறைபடுத்தப்பட்ட கலைஞர்களுக்கும், அதிகாரத்தின் செல்லப்பிராணிகளுக்குமான நாடாக இந்தியா மாறும்’ – நகைச்சுவைக்கலைஞர் குணால் கம்ரா

வரலாற்றாசிரியர் ராஜ்மோகன் காந்தி, எழுத்தாளர் அருந்ததி ராய், கலைஞர் மல்லிகா சாராபாய், நடிகர்கள் ஸ்வாரா பாஸ்கர், பூஜா பட் மற்றும் கல்கி கோச்லின், நகைச்சுவை கலைஞர்கள் குணால் கம்ரா மற்றும் சஞ்சய் ராஜோரா உள்ளிட்ட 110 பேர் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில் ”ஒரு சர்வதேச சமூகமாக நகைச்சுவை கலைஞர்கள், அரசியல் விமர்சகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், நடிகர்கள் ஆகிய நாங்கள், இந்தியாவில் நடப்பதை பார்த்து அச்சமடைந்துள்ளோம். மதங்கள் மற்றும் சமூகங்கள் முழுவதிலும் உள்ள மரபுகளின் ஒரு பகுதியாக சிரிப்பும் நகைச்சுவையும் பல நூற்றாண்டுகளாக கலைஞர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

நகைச்சுவை கலைஞர் முனாவரை வெளிவிட மறுத்த சிறை நிர்வாகம்- உச்சநீதிமன்ற தலையீட்டால் நள்ளிரவில் பிணையில் விடுதலை

”ஒரு நகைச்சுவையை வெளிப்படுத்துவதற்கு முன்பே, முனாவர் ஃபாருக்கி, எட்வின் அந்தோணி, பிரகார் வியாஸ், பிரியம் வியாஸ், நலின் யாதவ், சதகத் கான் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது, திடுக்கிட வைப்பதாகவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் இருப்பதாக” அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிற்கு ஜாமீன் மறுப்பு – இந்துக் கடவுள்களை அவமதித்த வழக்கில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு

”முனாவர் ஃபாருக்கிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தாலும், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆறு நபர்கள் மீதும் உள்ள  இந்த மோசமான வழக்குகளை ரத்து செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

”முனாவர் ஃபாருக்கி, அவருடைய நண்பர்கள் மற்றும் பிற அனைத்து கலைஞர்களின் இந்த துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எந்தவொரு உண்மையான ஜனநாயகத்திலும் கலைஞர்கள் தங்கள் காலத்தைப் பற்றி கருத்து தெரிவிக்க தங்கள் கலையைப் பயன்படுத்த உரிமை உண்டு” என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷாவை அவமதித்ததாக புகார் – நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிக்கு ஜாமீன்

இந்த கூட்டறிக்கை, பிராக்ரசிவ் கலெக்டிவ் இந்தியா, பென் அமேரிக்கா, ஃப்ரீமுயூஸ், ரிக்லெய்மிங் இந்தியா ஆகிய அமைப்புகளால் கூட்டாக வெளியிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்