‘புல்லி பாய்’ என்ற செயலியில் இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை பதிவேற்றிய நபர்கள் சீக்கிய சமூகம் தொடர்பான பெயர்களை ட்விட்டர் பயனர் பெயர்களாக பயன்படுத்தி, இரு சமூகத்திற்கு இடையே வகுப்புவாத பிரச்சனையை உருவாக்க முயன்றதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரையும் உடனடியாக கைது செய்ததன் வழியாக, உருவாக இருந்த வகுப்புவாத பதட்டம் தவிர்க்கப்பட்டது என்று காவல்துறையின் அறிக்கை வெளியிட்டுள்ளர்து.
முன்னதாக, கிட்ஹப் தளத்தின் செயலியான புல்லி பாய், இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி, அவர்களை ஏலத்திற்கு விடுவதாக அறிவித்திருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மும்பை சைபர் பிரிவு காவல்துறை அடையாளம் தெரியாத நபர்களுக்குமீது வழக்கு பதிவு செய்திருந்தது.
இவ்வழக்கு குறித்து, நேற்று (ஜனவரி 5), மும்பை கவால்துறை ஆணையர் ஹேமந்த் நாக்ராலே செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுபோன்ற போலிப்பெயர்கள் ஏன் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து மாலை, மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீக்கிய சமூகம் தொடர்பான பெயர்கள் இந்த ட்விட்டர் பயனர் பெயர்களாக உபயோகிக்கப்பட்டதன் நோக்கம், அச்சமூகத்தைச் சேர்ந்த நபர்களால்தான் இக்குற்றங்கள் செய்யப்படுகின்றன என்ற போலி தோற்றத்தை சமூகத்தில் உருவாக்க வேண்டும் என்பதுதான். இச்செயலியில் குறிவைத்து அவதூறு செய்யப்பட்டது இஸ்லாமிய பெண்கள். ஆகவே, இதை வைத்து இரண்டு சமூகங்களுக்கு இடையே பகையை உருவாக்கி, பொது அமைதியை சீர்குலைக்க முயன்றிருக்க வாய்ப்புள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரியான நேரத்தில் கைது செய்யப்பட்டதால், இது தவிர்க்கப்பட்டது” என்று கூறியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் @bullibai_, @sage0x11, @jatkhalsa7, @wannabesigmaf, @jatkhalsa, @Sikh_khalsa11 போன்ற ட்விட்டர் பயனர் பெயர்களை பயன்படுத்தி, புல்லி பாய் செயலியில் இருந்து ட்விட்டரில் அப்புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
அச்செயலியுடைய ட்விட்டர் பக்கத்தில் உள்ள தகவலின்படி, செயலியை உருவாக்கியவர் ‘கேஎஸ்எஃப் கல்சா சீக்கியப் படை’ என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ‘கல்சா சுப்ரீமாசிஸ்ட்’ என்ற மற்றொரு ட்விட்டர் பக்கம் புல்லி பாய் செயலியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவராக உள்ளது என்றும் காவல்துறையின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக, இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பொறியியல் மாணவர் விஷால் குமார் ஜா, ஜனவரி 10ஆம் தேதி வரை காவல்துறை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விஷால் குமார் ஜா பயன்படுத்தியதாகக் கூறப்படும் `கல்சா சுப்ரீமாசிஸ்ட்’ ட்விட்டர் பக்கத்தில், அப்பயனரின் இருப்பிடம் கனடா நாடு என குறிப்பிட்டதாகவும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
இணையத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு – ஒருவர் கைது, காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
புல்லி பாய் செயலியின் ட்விட்டர் பக்கத்தை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபூரில் கைது செய்யப்பட்ட ஸ்வேதா சிங் என்ற 18 வயது பெண்ணால் உருவாக்கப்பட்டது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஸ்வேதா சிங் முக்கியமானவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவதாக, மயங்க் ராவல் என்ற ஒரு பொறியியல் மாணவரையும் கைது செய்துள்ளதாக மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, பல இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் ‘புல்லி பாய்’ என்ற செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில், ‘இப்பெண்கள் விற்பனைக்கு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சுல்லி’ அல்லது ‘சுல்லா’ என்பது இஸ்லாமியர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் இழிவான சொல்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.