ரிபப்ளிக் தொலைகாட்சி மற்றும் அதன் மூத்த ஆசிரியர் அர்னாப் கோசாமி, டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக மும்பை காவல்துறை மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆகவே, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மேலும் தடை விதிக்க வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, சில தொலைகாட்சிகள் தங்களுடைய விளம்பர வருமானத்தை பெருக்குவதற்காக, டிஆர்பி ரேட்டிங்கில், முறைகேடு செய்வதாக, பார்க் (BARC) என்று அழைக்கப்படும் ‘ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வுக் கழகம்’ புகார் தெரிவித்தது. இதுகுறித்து மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்த விசாரணையை தொடங்கியது.
டிஆர்பி மோசடிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார் அர்னாப் – மும்பை போலீஸ்
இந்நிலையில், புதன்கிழமையன்று (06.01.2021) இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரிப்ளிக் தொலைகாட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தங்கள் சார்பாக ஆஜராக, கால அவகாசம் கோரினார். மருத்துவ அவசரம் காரணமாக அவரால் இன்று ஆஜராக முடியவில்லை என்று அவர் தெரிவித்ததாக தி இந்து கூறுகிறது.
உடனே, மும்பை காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அடுத்த விசாரணை வரை, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த விசாரணையின் போது, காவல்துறை தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணை வந்தபோதும், கபில் சிபல், ரிபப்ளிக் தொலைகாட்சி மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளித்தார்.
அர்னாப் கோஸ்வாமிக்கு முன்னுரிமை – 6 மனுக்களை ஒரே வாரத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம்
இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு மனுக்களையும், இடை மனுக்களையும் ரிபப்ளிக் தொலைகாட்சி தாக்கல் செய்துள்ளதாக தி இந்து கூறுகிறது.
புதன்கிழமையன்று (06.01.2021) இந்த வழக்கில் வாதங்கள் எதுவும் நடைபெறாத நிலையில், வழக்கு விசாரணையை ஜனவரி 15ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.