Aran Sei

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் – மாணவர்கள் எதிர்ப்பை மீறி இடித்த சிங்கள அரசு – தலைவர்கள் கண்டனம்

இலங்கை உள்நாட்டுப் போரின்போது தமிழின மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி சிங்கள அரசு இடித்துத் தரை மட்டமாக்கிதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மே 17 இயக்கம் ஆகியவை கண்டித்துள்ளன.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்” தமிழர்களின் விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலையை உலகமே கண்டித்தது. ஐநா பொது மன்றம் அதற்காக விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்களை நினைவுகூர்ந்திடும் விதமாக நினைவுத்தூண் ஒன்றைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நிறுவினார்கள்” என்று கூறியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு – பாஜக தலைவர்கள் விடுதலைக்கு எதிராக வழக்கு

”இனவெறி அரசின் வலியுறுத்தலால் அந்த நினைவுத் தூணை அகற்ற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறியது. அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று இரவோடு இரவாக ராணுவத்தையும் காவல்துறையையும் பயன்படுத்தி அந்த நினைவுத் தூணை சிங்களப் பேரினவாத அரசு இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறது. இனப் படுகொலைகளுக்கு நீதி வழங்காதது மட்டுமின்றி அதை நினைவுகூர்வதற்கும்கூட அனுமதிக்க மாட்டோம் என்று சிங்கள பேரினவாத அரசு கொக்கரிக்கிறது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் முல்லிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு – மாணவர்கள் போராட்டம்

”இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு நாட்களில் இந்த சம்பவம் நடந்திருப்பது, இந்தியாவை இலங்கை அரசு பொருட்படுத்தவே இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.சீன அரசின் கூட்டாளியாக மாறி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் இலங்கை அரசை இந்தியா இப்போதும் நட்பு சக்தியாகக் கருதுவதும் ஈழத்தமிழர் நலனை முற்றாகப் புறக்கணிப்பதும் சரியான அணுகுமுறை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுத் தூணை மீண்டும் நிறுவ வேண்டும் என சிங்கள அரசை வலியுறுத்துகிறோம்” என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் கூறியுள்ளார்.
மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒன்றரை லட்சம் தமிழர்கள்  இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் தமிழினம் போராடி வரும் வேளையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தமிழீழ இனப்படுகொலையாளர்கள், சர்வதேசத்தின் பார்வையின் முன்னியிலையே தமிழர் மீதான அடக்குமுறையை தொடர்கின்றனர். தமிழீழ கோரிக்கையை வேரோடு அழிக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாத இலங்கை அரசு முனைப்போடு இருப்பதையே யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவிடம் தகர்ப்பு உறுதிபடுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று, தமிழர்களுக்கான தீர்வு இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்று கூறிய இரண்டாம் நாளில் இது அரங்கேறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழீழ இனப்படுகொலை குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சி அமைக்க முடிந்ததே, சர்வதேச சமூகத்தின் தோல்வியாக பார்க்க முடிகிறது என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “இலங்கைத் தீவில் கோத்தபய ராஜபக்சேவின் கொலைகார அரசு, அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டித்து சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

”நெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், கழகக் கண்மணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்