Aran Sei

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு : மாற்றி மாற்றி பழிப்போடும் தமிழக, கேரள மாநில அரசுகள்

மிழக-கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நேற்று (மார்ச் 2), உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணையை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

அண்மையில், முல்லை பெரியாறு அணையானது நீரியல் ரீதியாக பலமாக உள்ளது என்றும் நிலநடுக்கங்களில் இருந்து பாதுகாப்பாக உள்ளது என்றும் உறுதி அளிக்கும் பிரமாண பத்திரத்தை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

முல்லைப்பெரியாறு துணைக்குழுவை கலைக்க தேவையில்லை: தமிழக அரசு

ஒத்துழைப்பு தர மறுக்கிறது, அக்கறை காட்டவில்லை என்பது போன்ற தமிழக அரசின் மீதான கேரள அரசின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், கேரள அரசு வேண்டுமென்ற சட்ட நடவடிக்கைகளை தவிர்க்கும் அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாக அப்பிரமாண பத்திரத்தில் தமிழக அரசு குற்றஞ்சாட்டியது.

மேலும், 2015-ம் ஆண்டில் இருந்து, அணையின் கட்டுமானத்தை பாதுகாப்பதற்கான கருவிகளை நிறுவுவதற்கும், முல்லை பெரியாறு அணைக்கும் அதன் பேபி அணைக்கும் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கும் கருவிகளை நிறுவுவதற்கும், தமிழக அரசால் முடியாமல் போனதற்கு காரணம் கேரள வனத்துறை 23 மரங்களை வெட்ட அனுமதி மறுத்து வருவதுதான் என்று தமிழக அரசு சுட்டிக்காட்டியிருந்தது.

அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 1939-ம் ஆண்டில் இருந்து அணையில் இருந்து வருவதும் தற்போது வழக்கொழிந்து போனதுமான மதகுகளை (கேட்) இயக்கும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக கேரள அரசு குற்றம் சாட்டியது.

புதிய அணை கட்டும் கேரளா : போராட்டத்தை அறிவித்த தமிழக விவசாயிகள்

மேலும், அணையின் பாதுகாப்பை கண்காணிக்க நிறுவப்பட்ட கருவிகளில் 70 சதவீதம் ஒழுங்காக இயங்கவில்லை என்று மத்திய நீர் ஆணையத்தின் (சி.டபிள்யூ.சி) ஆய்வு அறிக்கை கூறுவதாக மேற்கோள் காட்டியதோடு, நில அதிர்வுகளை கண்காணிக்க பரிந்துரைக்கப்பட்ட இரண்டு நில அதிர்வு கணக்கிடும் கருவிகளை, தமிழக அரசு இன்னும் நிறுவவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்