நக்சல் பாதிப்பு அதிகமுள்ள பாலகாட் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களைக் காவல்துறை மற்றும் பிற அரசு துறைகளில் பணியில் அமர்த்த மத்திய பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும் நக்சல்களை எதிர்த்துப் போராடும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் பாஜகவைச் சேர்ந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரித்துள்ளார்.
நேற்று (ஆகஸ்ட் 29), பாலகாட்டில் நடந்த அரசு அதிகாரிகளின் கூட்டத்திற்கு தலைமை வகித்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பாலகாட் மாவட்டத்தில் நக்சல் நடவடிக்கைகளை கண்காணிக்க பகுதிவாரியான திட்டங்களைத் தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
“இந்தத் திட்டங்கள் இப்பகுதியின் வளர்ச்சியை வேகப்படுத்தி, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும். நக்சல் ஆதிக்கமுள்ள பகுதிகளின் கீழ் வரும் கிராமங்களில் சாலை இணைப்பு, நீர்ப்பாசனம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். தகுதியுள்ள மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வன உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“காவல்துறை மற்றும் பிற அரசு துறைகளில் பாலகாட் மாவட்டத்தில் இளைஞர்களை பணியில் அமர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நக்சல்களை எதிர்த்துப் போராடும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும். அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பின் காரணமாக, ரூ .4,500 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் பெறப்பட்டுள்ளது.” என்று சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த முதலீடுகளின் வழியாக இப்பகுதியில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். காடுகளும் தாதுக்களும் மிகுதியாக உள்ள பாலகாட் மாவட்டத்தில், உயிரி எரிபொருள் எத்தனால் மற்றும் ஃபெரோ மாங்கனீஸ் ஆலைகள் அமைக்க தொழில் முனைவோர் ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களுக்கான தொழில்சார் உள்கட்டமைப்பு ஏற்பாடு செய்யப்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.