வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் நடைபெற்று வரும் போராட்டத்தில், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் மற்றும் தாய்மார்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாக தி குவிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, இந்தப் பெண்கள் பாரதிய விவசாயிகள் சங்கம் (பாரதிய கிசான் யூனியன்) அமைத்த மேடையில் அமர்ந்து புதிய சட்டங்களுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இவர்கள் கூறுவது என்ன?
டெல்லி-ஹரியானா எல்லையில் நடைபெறும் போராட்டத்தில் இணைந்த பெண்கள், “புதிய சட்டங்களால் இன்னும் அதிகமான விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வார்கள்” என்று கூறியுள்ளனர்.
“அன்றே எங்கள் வாழ்க்கை நின்றுவிட்டது. எங்களால் இந்த இழப்பிலிருந்து மீண்டுவர முடியவில்லை. அதன் பின்னர் எங்கள் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. நாங்கள் எங்களது இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். எனது 16 வயது மகன் இப்போது வேறொருவரின் விவசாய நிலத்தில் வேலை செய்கிறான். நான் இன்னும் ரூ.4 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்” என்று 56 வயதான ஜஸ்பீர் கவுர் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடனைச் செலுத்த முடியாத காரணத்தால் ஜஸ்பீர் கவுரின் கணவர் 2015-ம் ஆண்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பாட்டியாலாவைச் சேர்ந்த மொஹிந்தர் கவுர் (65), கல்விக்காகச் செலவு செய்ய முடியாத காரணத்தினால் தனது 19 வயது பேரன், 2015-ம் ஆண்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளார்.
எனவே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து இவர்கள் டெல்லி விவசாயிகளின் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.