Aran Sei

“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்

அகமதாபாத்தில் திறக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு, மோடியின் பெயர் வைக்கப்பட்டிருப்பது, அரசியலில் படேலின் முக்கியத்துவம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும், மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கும் இதேதான் நடக்கும் என்பதையும் காட்டுகிறது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இன்று (பிப்பிரவரி 26) சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில், உலகத்தில் உள்ள எல்லாபெரிய விஷயங்களும்’ குஜராத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று மோடி அமித்ஷா அரசு விரும்புகிறது என்று தெரிகிறது. அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அவர்கள் நாட்டை ஆள்கிறார்கள் என்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி மைதானம் என்று மாற்றப்பட்டது. இந்நாள் வரை, மெல்போர்ன் மைதானம்தான்  உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்து வந்தது. இப்போது மோடியின் பெயரைக் கொண்ட இந்த கிரிக்கெட் மைதானம் மிகப்பெரியது என்ற அந்தஸ்த்தை பெற்றுவிட்டது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் பெயரில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் – குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

ஆனால் இந்த செயல் ஏன் இத்தனை விமர்சனங்களை எழுப்புகிறது தெரியுமா? ஏனென்றால், இதற்கு முன்னர் மொடெரா ஸ்டேடியத்திற்கு, சர்தார் படேலின் பெயர் சூட்டப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு மோடியின் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, காங்கிரஸ் மற்றும் காந்திநேரு குடும்பத்தினர் மீது, சர்தார் வல்லபாய் படேலின் பெயரை வரலாற்றிலிருந்து அழிக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், தற்போது மத்திய அரசின் இந்த பெயர்மாற்றத்தின் வழியாக, உண்மையில் யார் அவ்வாறு செய்ய முயல்கிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.” என்று சாம்னாவின் தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மோடி ஒரு சிறந்த தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் மகாத்மா காந்தி, பண்டிதர் நேரு, சர்தார் படேல், இந்திரா காந்தி ஆகியோரை விட மேலானவர் என்று அவரது குருட்டு ஆதரவாளர்கள் கருதினால், அது மூட நம்பிக்கையின் அடுத்த கட்டமாகவே கருதப்படும். மோடி மிகவும் பிரபலமான தலைவர். மக்கள் அவருக்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். ஆனால் இந்த பெரும்பான்மை பொறுப்பற்று நடப்பதற்கு வழங்கப்பட்ட உரிமம் அல்ல.” என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை

“படேல் மற்றும் நேரு ஆகியோருக்கும் இந்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்ற பொறுப்பு இருந்தது. நேரு தன்னுடைய ஆட்சிகாலத்தில் ஐஐடி, பார்க், பக்ரா நங்கல் திட்டம் போன்றவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆனால் மோடியின் ஆட்சியில் என்ன நடந்தது? சர்தார் படேலின் பெயரைக் கொண்ட ஒரு மைதானத்திற்கு நரேந்திர மோடி மைதானம் என்று பெயர் மாற்றப்பட்டது. நேற்று வரை படேலின் புகழைப் பாடியவர்கள், இன்று ஒரு மைதானத்திற்கு உள்ள அவரது பெயருக்கு எதிராக உள்ளனர்.” என்று சாம்னாவின் தலையங்கத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இன்றைய அரசியலில் படேலின் முக்கியத்துவம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும், மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கும் இதேதான் நடக்கும் என்பதையும் இது காட்டுகிறது. மகாராஷ்டிராவில், சத்ரபதி சிவாஜியின் பெயரும் தேர்தல்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி மைதானத்தில் ரிலையன்ஸ், அதானி முனைகள் – ராகுல் காந்தியின் ’நாம் இருவர், நமக்கு இருவர்’ கிண்டல்

“சர்தார் படேலுடைய எந்தக் கொள்கைகளை தற்போதைய மத்திய அரசு பின்பற்றப்படுகின்றது? விவசாயிகளின் உரிமைகளுக்காக பர்தோலி சத்தியாகிரகத்தை தலைமை தாங்கி நடத்திச் சென்றார் சர்தார் படேல். ஆனால், தற்போது விவசாயிகளின் நிலைமை என்னவாக இருக்கிறது? அந்த சத்தியாகிரகம் முடிந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து, கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தின் போது, ​​அப்போதைய கட்சித் தலைவராக இருந்த சர்தார் படேல், தான் ஒரு விவசாயி என்று அறிவித்தார்.” என்று சாம்னாவின் தலையங்கத்தில் நினைவூட்டப்பட்டுள்ளது.

மேலும், “இப்போது நாட்டில் விவசாயிகளின் நிலை என்னவாக இருக்கிறது என்று பாருங்கள்? விவசாயிகள் கடந்த நான்கு மாதங்களாக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர்கள் (மத்திய அரசு) சர்தார் படேலை தங்களுடையவர்களாக பிரச்சாரம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்று சிவசேனாவில் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்