Aran Sei

வாரணாசியில் மோடியின் வருகைக்காக காவி சாயம் பூசப்பட்ட மசூதி – எதிர்ப்பு வலுத்ததால் வெள்ளை நிறம் அடித்த மாவட்ட நிர்வாகம்

டிசம்பர் 13 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகைத் தரவிருப்பதை முன்னிட்டு, காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள மசூதிக்கு காவி வண்ணம் பூசப்பட்டுள்ளதாக மசூதி குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால், அச்சாலையில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் ஒரே மாதிரியான வெளிர் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இஸ்லாமிய சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, புலனால பகுதியில் அமைந்துள்ள அம்மசூதிக்கு மீண்டும் வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளது.

அஞ்சுமான் இன்டெஜாமியா மஸ்ஜித் குழுவின் முகமது இஜாஸ் இஸ்லாஹி கூறுகையில், “மசூதி முதலில் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதற்கு காவி வண்ணம் பூசப்பட்டது. மசூதி கமிட்டியிடம்கூட கருத்து கேட்கப்படவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கிறது. காசி விஸ்வநாதர் கோயில் அலுவலகத்தில் இதுகுறித்து ஆட்சேபனை தெரிவித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மாவட்ட மாஜிஸ்திரேட் இடத்திலும் எங்கள் ஆட்சேபனையை வைக்க முயன்றோம். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. பின்னர், நிர்வாகம் அதைப் புரிந்து கொண்டது. மசூதிக்கு மீண்டும் வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இதுகுறித்து பேசியிருந்த வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தின் (விடிஏ) செயலாளரும், காசி விஸ்வநாதர் கோவிலின் தலைமை செயல் அதிகாரியுமான சுனில் வர்மா, சன்னதிக்கு செல்லும் சாலையில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் ஒரே மாதிரியான வண்ணம் பூசப்படும். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் வெளிர் இளஞ்சிவப்பு வண்ணத்திலால் ஆன மணற்கற்களால் ஆனவை. அதன்பொருட்டே, அவ்வர்ணம் பூசப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்