Aran Sei

பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை – சமூக விரோதக் கும்பல்களை அரசு காப்பாற்றுகிறதா? – ஸ்டாலின் கேள்வி

சென்னை, குன்றத்தூர் அருகே தமிழன் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றிவரும் மோசஸ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூக விரோதச் செயல்கள் குறித்து செய்தி வெளியிட்டதால் அவர் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதை மோசஸ் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மோசஸுக்குத் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாக அவருடைய தந்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மோசஸின் தந்தை கூறுகிறார்.

இந்நிலையில், நேற்று (08.11.2020) இரவு வீட்டில் இருந்த மோசஸை வீட்டுக்கு வெளியே வரவழைத்த ரவுடிக் கும்பல் ஒன்று அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மோசஸின் தந்தை ஜேசுதாசன் கொடுத்துள்ள புகாரில் ”மோசஸ் தமிழன் தொலைக்காட்சியின் திருவெறும்பூர் வட்ட நிருபராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் நானும் மோசஸும் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தபோது பழையநல்லூர்ப் பகுதியைச் சேர்ந்த மனோஜ் எனும் நபர் வீட்டில் இருந்து மோசஸை வெளியில் வரச்சொன்னார்” என்று கூறியுள்ளார்.

“இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. மோசஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றவுடன் அவரைக் கொலை செய்யத் தயாராக இருந்த அட்டை, எலி அப்பு, திருமலை ஆகியோர் சேர்ந்து மோசஸை வெட்டியுள்ளனர். இதனால் தலை மற்றும் கையில் வெட்டுப்பட்டு ரத்தம் அதிகப்படியாக வெளியேறி ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்சில் சென்னைக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர் பரிசோதித்ததில் `உங்கள் மகன் ஏற்கனவே இறந்துவிட்டார்’ எனக் கூறினார்” என்று புகார் தெரிவித்துள்ளார்.

“இந்தக் கொலை பழைய நல்லூர்ப் பகுதியில் வசிக்கும், துரைசாமியின் மகன் நவமணி என்பவரின் தூண்டுதலின் பெயரால் நடந்துள்ளது’’ என்று புகாரில் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை நிகழ்வு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சட்ட விரோதச் செயல்களை வெளிக்கொண்டு வந்ததால் மிரட்டப்பட்ட செய்தியாளர் மோசஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இன்றி நேற்று வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். சமூக விரோதக் கும்பல்களை அரசு காப்பாற்றுகிறதா? பத்திரிகைச் சுதந்திரத்திற்கு திமுக துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் வைகோ வெளியிட்டுளள அறிக்கையில் “பொதுமக்கள் இடையே அச்ச உணர்வு மேலோங்கி இருக்கின்றது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கின்ற முதல்வர், கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடும் தண்டனை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட மோசஸ் குடும்பத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “கஞ்சா வணிகம் குறித்த செய்தி வெளியிட்டதற்காக ஒரு செய்தியாளரை சமூகவிரோதக் கும்பல் மிகச் சாதாரணமாக வெட்டிப்படுகொலை செய்கிறதென்றால் போதைப்பொருள்களை வணிகம் செய்திடும் இக்கும்பலின் ஆதிக்கம் எந்தளவில் சமூகத்திலிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார்.

ஆகவே,  இவ்விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு மோசஸைப் படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்த்துடைப்பு நிதி வழங்கிட வேண்டுமெனவும், போதைப்பொருள் வணிகம் செய்திடும் சமூக விரோதக் கும்பலைக் களைந்திட தனிப்படை அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்வதாக சீமான தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ”குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்துக! ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. ஊடகவியலாளர்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டால் அது ஜனநாயகத்துக்குப் பேராபத்தாகவே முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள  அறிக்கையில் “சமூக விரோதக் கும்பல்களைக் காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மோசஸ் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்” எனவும் “தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு நிலையின் அவலத்தை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது’’ என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்