Aran Sei

கங்கையாற்றில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் : ஆம்புலன்ஸில் கொண்டு வந்து கொட்டுவதாக மக்கள் வேதனை

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் கங்கை ஆற்றில் மிதந்து வருவது, பீகார் மற்றும் உத்தரபிரதேச மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது.

ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, முழு நாடும் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கை ஆற்றில் மிதந்து வரும் சடலங்களின் பயங்கொள்ள வைக்கும் காட்சிகள், கரையோர கிராமப்புறங்களில் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

கடந்த இரண்டு நாட்களாக, பீகாரின் பக்ஸர் மாவட்ட கங்கைக் ஆற்றங்கரையில் ஒதுங்கிய 100-க்கும் மேற்பட்ட சிதைந்து போன சடலங்கள் முறையாக தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று (மே 11) அதே மாவட்டத்தில் உள்ள பிரம்மபூர் பகுதி கங்கை கரையில் மேலும் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிராமங்கள் அனைத்தும் சடலங்கள்  எல்லாம் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தை சேர்ந்தவை என்று கூறி,  அச்சடலங்களுக்கு பொறுப்பேற்க அம்மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.

கங்கையில் வீசப்படும் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் : உ.பி மயானங்களில் இடமில்லாததால் நேரும் அவலம்

சடலங்கள் கரையொதுங்கும் கங்கைக்கரை கிராமங்கள் பலவும், இரு மாநில எல்லையில் அமைந்துள்ளன. அதன் காரணமாகவே, பொறுப்பேற்க மறுத்து மாற்றி மாற்றிப் பழிப்போடும் விளையாட்டை இருமாநில அரசுகள் செய்கின்றன.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்த்தன் சிங் சிக்ரிவால், “பீகாரின் சரண் மாவட்டத்தை உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்துடன் இணைக்கும் ஜெய்பிரபா சேது ஆற்றுப் பாலத்தில் வைத்து, ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படும் சடலங்கள் ஆற்றில் கொட்டப்பட்டுகின்றன. கரையொதுங்கும் சடலங்களுக்கு முறையாக இறுதி சடங்குகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த அரவிந்த் சிங் பேசுகையில், “இரு மாநில அரசுகளும் இந்தக் குற்றவுணர்வுக்கு அஞ்சுகின்றன. இரு மாநிலங்களில் இருந்தும் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படும் சடலங்கள் ஆற்றில் கொட்டப்படுகின்றன.” என்று கூறியுள்ளார்.

Source; ndtv

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்