Aran Sei

‘தற்போதைய கொரோனா நெருக்கடிக்கு மக்கள், அரசு மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்’ – ஆர்எஸ்எஸ்

ற்போது இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, மக்கள், அரசு மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் நேர்மறை சிந்தனையையும் ஏற்படுத்தும் நோக்கில், எல்லையற்ற நேர்மறை எண்ணங்கள் என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் இணையவழி கருத்தரங்கை நடத்தி வருகிறது.

நேற்று (மே 15), அக்கருத்தரங்கில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “தற்போது இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, மக்கள், அரசு மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். முதல் கொரோனா அலை முடிந்த பின்னர், அனைவருமே மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாது மிகவும் அலட்சியமாக இருந்துவிட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.

மோசமான தடுப்பு மருந்து கொள்கைக்கான விருது, மோடிக்கு வழங்கப்பட வேண்டும் – அசாதுதீன் ஒவைசி

“இனி கொரோனா மூன்றாவது அலையும் வரும் என்கிறார்கள். இப்போது நாம் அதைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா? இல்லை, கொரோனா தொற்றை எதிர்கொள்ள தேவையான நேர்மறை எண்ணத்தை உருவாக்கிக்கொண்டு, அதை வெல்ல வேண்டுமா?” என்று மோகன் பாகவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தற்போதைய சூழலில், நாடு தனது பார்வையை எதிர்காலத்தை நோக்கித் திருப்ப வேண்டியது அவசியம். தற்போதைய அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை கொண்டு, மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பில் மோடியின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை – சர்வதேச மருத்துவ இதழ் லான்செட் கண்டனம்.

“இந்நேரத்தில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மேஜை மேல் இருக்கும் வாசகத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.  “என்னுடைய அலுவலகத்தில் எதிர்மறை சிந்தனைக்கே இடமில்லை. தோல்விக்கான சாத்தியங்கள் நாங்கள் பொருட்படுத்துவதில்லை. காரணம், உண்மையில் தோல்வி என்பதே இல்லை.” என்று எழுதியிருக்கும். அவ்வழியிலேயே இந்தியர்களும் நேர்மறை சிந்தனைகளை கைக்கொண்டு, இந்த பெருந்தொற்றை வீழ்த்தி வெற்றியைக் காண வேண்டும்.” என்று இணையவழி கருத்தரங்கில் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.

இக்கருத்தரங்கில், ஈஷா யோகி மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ்வும் பேசியுள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்