Aran Sei

தந்தையின் இறுதிச் சடங்கில் முழக்கமிட்ட மகன்கள் உபா சட்டத்தில் கைது: ஒன்றிய அரசு அருவருப்பாக நடந்து கொள்வதாக தலைவர்கள் கண்டனம்

credits : Greater Jammu

காஷ்மீரில், காவல்துறையின் தடுப்புக் காவலில் உயிரிழந்த அஷரஃப் சேராயின் இறுதிச்சடங்கின் போது முழக்கங்களை எழுப்பியதாக, அவருடைய இரண்டு மகன்களும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது முகமது அஷ்ரஃப் சேராய், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மே 5 ஆம் தேதி (2021), உடல்நலக் கோளாறால், அவர் மரணமடைந்தார். முன்னர் காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் முன்னணியில் இருந்தவர் அஷ்ரஃப் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அஷ்ரஃப் சேராயின், இறுதிச் சடங்கின் போது, தேசவிரோத முழக்கங்களை எழுப்பியதாக, அவருடைய மகன்களான ராஷித் சேராய் மற்றும் முஜாஹித் சேராயை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்திருப்பதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘நாங்கள் பாலஸ்தீனர்கள்’ : இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 17 காஷ்மீர் இளைஞர்கள் கைது : கண்டனத்தையடுத்து விடுதலை

இந்தச் சூழலில், அஷ்ரஃப் சேராயினுடைய அரசியல் சித்தாந்தத்திற்காக, அவருடைய மகன்களைக் கறுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக, அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

‘இது எங்கள் காஷ்மீர், நீங்கள் வெளியிலிருந்து வந்திருக்கிறீர்கள்’ என்று பேசிய பெண் காவலர் – உபா சட்டத்தில் கைது

இது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”இங்கு நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் இந்திய அரசு கையிலெடுக்கும் ஆயுதம் ‘பொது பாதுகாப்புச் சட்டம்’ தான். சமீபத்திய உதாரணம், போதிய மருத்துவ பராமரிப்பு இல்லாததால் தந்தையை தடுப்புக் காவலில் இழந்த அஷ்ரப் செஹ்ராயின் மகன்கள் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் பிற பகுதிகளில், இறந்தவர்கள் மிக மோசமான நடத்தபடுகின்றனர், ஆனால் காஷ்மீரில் உயிர் வாழும் மக்களே மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

வலி பொறுக்க முடியாமல் அழக்கூட உரிமை இல்லையா? – ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மெஹபூபா முப்தி

மேலும், ”காஷ்மீர் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை, இங்கு மக்களின் எண்ணங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அதற்காக அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இங்கு, ஒருவரின் கருத்தை வெளிப்படுத்த எந்த தளமும் இல்லை, இது காஷ்மீரிகளை கடும் நெருக்கடிக்குத் தள்ளுகிறது” என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார்.

“நீடித்த அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் ஜம்மு & காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் ” – மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

இந்தக் கைதைக் கண்டித்துள்ள மக்கள் மாநாட்டு கட்சியைச் சேர்ந்தலோன், ”மத்திய அரசு கொடூரமாகவும், அருவருப்பாகவும், மூர்க்கத்தனமாகவும் நடந்து கொள்கிறது” என்று ட்விட் செய்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்