Aran Sei

மோடி அரசு விளம்பரங்களில் செலவழிக்கும் மக்கள் வரிப் பணம் – ஆர்டிஐ தகவல்

ரேந்திர மோடி அரசு, கடந்த நிதியாண்டு, விளம்பரத்திற்காக மக்கள் வரிப் பணத்திலிருந்து ரூ.713.20 கோடியைச் செலவளித்துள்ளது.

செய்தித்தாள்கள், மின்னணு ஊடகங்கள் மற்றும் பலகைகளில் போன்றவற்றில் விளம்பரத்தை வெளியிட, மோடி அரசு இந்த ரூ.713.20 கோடி ரூபாய் பணத்தை செலவிட்டுள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் கீழ் உள்ள தகவல் தொடர்பு பணியகம், சமூக ஆர்வலர் ஜடின் தேசாய் தாக்கல் செய்த தகவல் அறியும் கேள்விக்குப் பதிலளித்துள்ளது. அதில், மத்திய அரசு 2019-2020 க்கு இடையில் விளம்பரங்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.1.95 கோடியைச் செலவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியகம் அதன் பதிலில், மொத்தத் தொகையைப் பிரித்து, ஒவ்வொரு வகை விளம்பரங்களுக்கும் எவ்வளவு செலவாகியுள்ளது எனும் கணக்கைத் தெரிவித்துள்ளது. அதன்படி, அச்சு விளம்பரங்களுக்காக ரூ.295.05 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு ரூ.317.05 கோடி, விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளுக்கு ரூ.101.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அது வெளிநாட்டு ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக அரசு செலவழித்த தொகை குறித்த எந்தத் தகவலையும் வழங்க மறுத்துள்ளது.

2019-ம் ஆண்டு, ஜூன் மாதம், மும்பையைச் சேர்ந்த அனில் கல்கலியின் மற்றொரு தகவல் அறியும் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சகம், அச்சு விளம்பரம், மின்னணு ஊடகம், விளம்பர பலகைகள் மற்றும் அச்சிடப்பட்ட விளம்பரம் ஆகியவற்றிற்காக ரூ.3,767.2651 கோடியை வரிப் பணத்திலிருந்து செல்வழித்ததாகக் கூறியது.

அதற்கு ஒரு வருடம் முன்னதாக, 2018-ம் ஆண்டு, மே மாதத்தில், அனில் கல்காலி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தாக்கல் செய்த கேள்விகளுக்கு, தகவல் தொடர்பு பணியகம் பதிலளித்தது. அதில், 2014-ம் ஆண்டு, ஜூன் மாதம் பாஜக அரசு ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, மோடி அரசாங்கம் ஊடகங்கள் மற்றும் பிற இடங்களில் விளம்பரம் செய்வதற்காக ரூ.4,343.26 கோடியை ஆடம்பரமாகச் செலவு செய்தது தெரியவந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்