சென்ற மார்ச் 23 அன்று, மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA)” நிறைவேற்றியே தீருவோம் எனும் முழக்கத்தை அமித் ஷா முன்வைத்தது அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக வந்ததை அறிவோம். இந்திய சுதந்திரத்தை ஒட்டியும், வங்க தேசம் பிரிந்தபோதும் நடந்த மதக் கலவரங்களில், இன்றைய வங்க தேசத்திலிருந்து ஏராளமானோர் மேற்கு வங்கத்தில் அடைக்கலம் ஆனார்கள். தாங்கள் மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றினால், அடைக்கலம் புகுந்த அனைவருக்கும் புதிய குடியுரிமைச் சட்டத்தின்படி, முறையான குடியுரிமை வழங்கப்படும் என்றும் அவர்ஆசை காட்டினார். தாங்கள் வெற்றிபெற்றால் முதல், அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதை நிறைவேற்றுவோம் என (2021) மேற்கு வங்க சட்ட மன்ற தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டும் இருந்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவர்கள் 2020 லேயே இயற்றி இருந்தும் கூட, இன்னும் அதைச் செயல்படுத்துவதற்கான விதிகளை அவர்கள் உருவாக்கவில்லை என்பது நினைவிற்குரியது. எனினும் விதிகள் இயற்றப்படாவிட்டாலும் கூட, அதைச் செயல்படுத்துவோம் என அவர்கள் வாக்குறுதி அளித்தனர். பெருந்தொற்றுத் தாக்குதலால்தான் தங்களால் அந்த விதிமுறைகளை இன்னும் உருவாக்க முடியவில்லை என இதுவரை சொல்லி வந்தவர்கள், இந்தப் பெருந்தொற்று இன்றளவும் இந்தியாவில் கட்டுப்படுத்தப் படாதபோதும், உலகிலேயே இப்போது கோவிட் 19 கொடுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா உள்ளபோதும் அது குறித்தெல்லாம் இம்மியும் கவலைப்படாமல் இன்று குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றச் சூளுரைக்கின்றனர். குறிப்பாக, குடியுரிமை இல்லாத இந்துக்கள் (இஸ்லாமியர்கள் தவிர்த்து) முதலானோர் அதிகம் குடிபெயர்ந்து வாழும் ‘’கொசாபா” முதலான இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது அமித்ஷா இதை வலியுறுத்தினார்., எல்லோருக்கும் தடுப்பூசி போட்டு முடித்த கையோடு குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்பதை அழுத்தமாகப் பேசினார்.
இந்தியச் சுதந்திரத்தை ஒட்டிய மதக் கலவரங்களின்போதும், வங்க தேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்தபோதும் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள், மேற்கும்வங்கத்தில் அகதிகளாகக் குடிபெயர்ந்ததை அறிவோம். இவர்களுள் ”வடக்கு 24 பர்கானாக்கள்” மாவட்டத்திலும் நாடியா, கிழக்கு பர்த்வான் முதலான பகுதிகளிலும் குடிபெயர்ந்து வாழும் ’நாமசூத்திரர்” எனும் பிரிவைச் சேர்ந்த ’மாதுவா’ எனும் மக்களுக்கு, அவர்கள் இந்துக்கள் என்கிற வகையில், தற்போது இயற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி குடியுரிமை வழங்கப்படும் என்பதை அமித் ஷா இம்முறை தன் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பெரிய அளவில் பயன்படுத்திக் கொண்டார். “நாங்கள் 2018 இல் மாதுவாக்களுக்கு அந்த வாக்குறுதி அளித்தோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். 2020 இல் அதற்கான சட்டத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினோம்.” – என வெளிப்படையாக அமித் ஷா பிரச்சாரம் செய்தது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமல்ல. CAA வை நிறைவேற்றுவதோடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்குப் 10,000 ரூ நிதியும் அளிப்போம் என்றும் வாக்குறுதி அளித்தார்.
பாஜக உருவாக்கி இருக்கும் CAA சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உட்பட ஐநது நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்துள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை அளிக்கப்படும் என்பதை இன்று அமித்ஷா இப்படி வெளிப்படையாகத் தன் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். “கடந்த 70 ஆண்டுகளாக இங்கு தீர்க்கப்படாமல் இருந்த இந்தக் குடியுரிமைப் பிரச்சினைக்கு இப்படித் தீர்வு கண்டது, காஷ்மீருக்குச் சிறப்புரிமை வழங்கிய அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்கியது, இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது, பாகிஸ்தான் தூண்டுதலில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவந்தது என எல்லாவற்றிற்கும் தீர்வு கண்டோம்” என அவர் இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் ஊடாக முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வெறுப்பை விதைக்கவும் இது வாய்ப்பானது.
விதி முறைகள் இயற்றபடாமலேயே செயலாக்கம் தொடங்குகிறது
CAA திருத்தச் சட்டத்திற்கான புதிய விதிமுறைகளை இயற்றாமல் இப்போதுள்ள விதிகளின்படி இந்த மே 28 (2021) அன்று கெசட் (Gazzate) அறிவிப்பு ஒன்றை மோடி அரசு வெளியிட்டது. இதன்படி குஜராத், சட்டிஸ்கார், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருக்கும் 13 மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்குச் சிறப்பு அதிகாரம் ஒன்று அளிக்கப்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் உள்ள சிறுபான்மை மக்களின் குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசோதித்து அவற்றுக்கு ஏற்பு அளிக்கும் அதிகாரத்தை அவர்கள் இதன்மூலம் பெறுகின்றனர். இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை அவர்கள் வழங்கலாம். முஸ்லிம்களாக இருந்தால் மட்டும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கக் கூடாது. குடியுரிமை கோரும் இதரர்கள் அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டு குடியுரிமை விதிகளின்படி இப்போது இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2019 இல் இவர்கள் இயற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இன்னும் விதிகள் இயற்றப்படாததால், இப்படி ஏற்கனவே உள்ள சட்டத்தைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பும் அதிகாரமும் தமக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுகிறது.
இதேபோன்ற ஒரு அறிவிப்பு 2018 லும் வெளியிடப்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதில் வேறு சில மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டன. மோர்பி, ராஜ்காட், படான், வடோதரா (குஜராத்), துர்க் மற்றும் பாலோடபஸார் (சட்டிஸ்கார்), ஜலோர், உதய்பூர், பாலி, பார்மர், சிரோஹி (ராஜஸ்தான்), ஃபரிதாபாத் (ஹரியானா) மற்றும் ஜலந்தர் (பஞ்சாப்) ஆகியன இந்த அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டன. ”குடியுரிமை கோருபவரின் தகுதி முதலியவை குறித்து மாவட்ட ஆட்சியர் திருப்தியுற்றால் அவருக்கு – By Registration or Naturalisation – இந்தியக் குடியுரிமையை அவர் வழங்குவார். உரிய சான்றிதழும் அவருக்கு வழங்கப்படும்” – எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்கதைச் சுருக்கம்
2014ல் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைக்கப்பட்டபோது முதன் முதலில் அசாம் மாநிலத்தில் “குடியுரிமைப் பதிவேடு” தயாரிக்கும் திட்டத்தைத் தொடங்கினார்கள். “தேசிய அளவிலான குடியுரிமைப் பதிவேடு” (National Register of Citizens) உருவாக்கப்படும் என்பதையும் அறிவித்தார்கள். 1971 மார்ச் 24 என்பதை இறுதித் தேதியாக அறிவித்து, அதற்கு முன்னதாக அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்படும் என அறிவித்து, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அது நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அஸ்சாமில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் குடியுரிமையை இழந்தார்கள். அதிகம் கல்வி அறிவு இல்லாத ஏழை எளிய மக்கள் உரிய சான்றிதழ்களைக் கொடுக்க இயலாமல் பட்ட துன்பம் சொல்லி மாளாது. அதில் வங்கதேச முஸ்லிம்கள் மட்டுமின்றி ஏராளமான இந்துக்களும் இருந்தது பா.ஜ.க அரசுக்குப் பிரச்சினை ஆனது. மேலும் கால நீடிப்புச் செய்து பாதிக்கப்படவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டபோது இன்று அஸ்சாமில் குடி உரிமை அற்றவர்களாக 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்துக்களாக உள்ளது பா.ஜ.க அரசின் நோக்கத்திற்கு இடையூறாக உள்ளது. எனினும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருந்தலைவர் மோகன் பகவத் எந்த வகையிலும் இந்துக்கள் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட மாட்டார்கள் என்பதை வெளிப்படையாகவே அறிவித்தார். பா.ஜ.க அமைச்சர்களும் அப்படியான வாக்குறுதிகளை அளித்தனர். இப்படி எந்த ஒரு குறிப்பிட்ட மத அடிப்படையில் சலுகைகள் காட்டுவது, நமது அரசியல் சட்டத்தின் 14, 15, 21 முதலான பிரிவுகளுக்கு எதிரானது என்பது பற்றியெல்லாம் அவர்கள் எள்ளளவும் கவலைப்படவில்லை.
ஹிட்லரின் கொடுமைகளின் ஊடாகக் குடியுரிமை அற்றுப் பெருந் துன்பங்களுக்கு ஆளானவர்களில் ஒருவரான அறிஞர் ஹன்னா ஆரென்ட் சொன்னது போல, இன்றைய அரசமைப்புகளில் குடியுரிமை என்பது “உரிமைகளைப் பெறுவதற்கான உரிமை”. குடியுரிமை அற்றவர்களுக்கு வேலை பெறுவதற்கு, படிப்பதற்கு, வணிகம் செய்வதற்கு என, எதற்கும் உரிமை இல்லை. அப்படிக் குடியுரிமை அற்ற இலட்சக் கணக்கானோரை என்ன செய்யப் போகிறார்கள்? அரசிடம் திட்டமில்லை.
வங்க தேசத்திலிருந்து இந்துக்களும் வந்துள்ளனர். முஸ்லிம்களும் வந்துள்ளனர் என்பது இக்கட்டுரையில் முன்பே சொல்லப்பட்டது. ஆனாலும் இன்று குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்படும் இந்த வங்க முஸ்லிம்களை மீண்டும் வங்கத்திற்கு இந்திய அரசு திருப்பி அனுப்ப முடியாது. அப்படி அனுப்புவதற்கான ஒப்பந்தம் (Deportation agreement) எதையும் இந்திய அரசு வங்க அரசுடன் செய்து கொள்ளவில்லை. பின் என்ன செய்யப் போகிறார்கள்? மிகப்பெரிய தடுப்புக்காவல் முகாம்களை (Detention centers) அமைத்து அடைத்து வைக்கப் போகிறார்களா? இதற்கெல்லாம் பதில் இல்லாமலேயே இப்போது வேலைகள் நடக்கின்றன.
இப்படி வங்க தேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களில் முஸ்லிம்களை மட்டும் விலக்கி மற்றவர்களுக்குக் குடியுரிமையை அளிப்பதற்கு நமது அரசியல் சட்டத்தில் இடமில்லை. இந்த அரசியல் சட்ட மீறலை நியாயப்படுத்த அமித்ஷா சொல்லும் ‘நியாயம்’ ஒன்றுதான். அதாவது இந்த மூன்றும் முஸ்லிம் நாடுகளாம். எனவே அங்கிருந்து முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு வருவதற்கு வாய்ப்பில்லையாம். அண்டை நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு வருபவர்களுக்காகத்தான் இந்தச் சலுகைகள் என்றால், அண்டை நாடுகளான மியான்மரிலிருந்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்கள், இலங்கையிலிருந்து வரும் நம் தமிழர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க, இச்சட்டம் ஏன் வழிவகை செய்யவில்லை என்கிற கேள்விக்கு பதிலில்லை.
தொடக்கத்தில் மோடி அரசு இந்தச் சட்டத்தை வெளியிட்டபோது அதில் இந்த மூன்று நாடுகளிலும் வாழும், இந்த ஆறு மதத்தினர்களில் உள்ள, “துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு” (persecuted minority) மட்டுமே இந்தச் சலுகைகள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது சட்டமாக நிறைவேற்றப்பட்டபோது, “துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்” எனும் பதம் அதில் நீக்கப்பட்டது. காரணம் ஏதும் சொல்லப்படவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் இதன் மூலம் அமித்ஷா சொல்லும் சேதி. யூதர்கள் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் இஸ்ரேலின் ”அலியாஹ்” சட்ட வடிவம் இங்கே அப்படியே ஏற்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.
(கட்டுரையாளர் அ.மார்க்ஸ், ஒரு எழுத்தாளர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.