Aran Sei

70 ஆண்டுகால  இந்தியாவின் பொக்கிஷங்களை மோடி அரசு விற்கிறது – ராகுல் காந்தி கண்டனம்

70 ஆண்டுகளில் மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் பொக்கிஷங்களை, நான்கு நபர்களுக்கு உதவுதற்காக மோடி அரசு விற்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து  கொண்ட அவர், ’தேசிய பணமாக்கல் திட்டம் (என்.எம்.பி)’ குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.

தனியார்மயமாக்கல் மூலம் ஏக போகங்களை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள  என்.எம்.பி திட்டத்தால், இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பு பறிக்கப்படும் என தெரிவித்தார்.

முறைசாரா துறையை மோடி அரசு ‘அழிப்பதாக’ குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, ”பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். இதனால் சமூக கோவம், சமூக பதட்டம் உருவாகி, வன்முறை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

பயணிகள் ரயில்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், இயற்கை எரிவாயு குழாய்கள், மின் தொடரமைப்பு பாதைகள், கிடங்குகள், தேசிய நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் ஸ்டேடியங்கள் உள்ளிட்ட “பயன்படுத்தப்படாத” உள்கட்டமைப்புகளை தனியார் மயமாக்குவதன்  மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ₹6 லட்சம் கோடியைப் பணமாக்குவதற்கான லட்சிய திட்டத்தை நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று வெளியிட்டார்.

“பிரதமரும் பா.ஜ.க.வும் (காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்று கூறுவார்கள். காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட  அனைத்து சொத்துக்களின் பட்டியல் இங்கே உள்ளது. இந்தச் சொத்துக்கள் கடந்த 70 ஆண்டுகளில் பொதுப் பணம், ஆயிரக்கணக்கான ரூபாய்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன. இப்போது, பிரதமர் இந்த நாட்டின் ’பொக்கிஷங்கள’ விற்கும் பணியில் உள்ளார்” என ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.

“அரசாங்கம் தெளிவாக பொருளாதாரத்தை தவறாக கையாண்டுள்ளது. என்ன செய்வது என்று அரசாங்கத்திற்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் அடிப்படையில் ஐ.மு.கூ (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) கட்டியதை அழித்துவிட்டனர், இப்போது, கடைசி முயற்சியாக, நாங்கள் (70 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி) உருவாக்கிய அனைத்தையும் விற்கிறார்கள். எனவே, என்னைப் பொறுத்தவரை, இது ஒரு பெரிய சோகம், இது ஒவ்வொரு தேசபக்த நபரும், தேசியவாத நபரும் எதிர்க்க வேண்டிய ஒன்று” என அவர் கூறினார்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்ட சொத்துக்களை விற்பதற்கான ஒரே நோக்கமாக நிதி திரட்டுவது இருக்க முடியாது என ப. சிதம்பரம் தெரிவித்தார்.

“பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்காமல் நீங்கள் இந்த முயற்சியில் இறங்க கூடாது. ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதா? துறைமுகத் தொழிலாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதா? கிடங்குகளில் பணியமர்த்தப்பட்டவர்கள் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதா? விவசாயிகளைக் கலந்தாலோசித்தீர்களா? நிதி ஆயோக் என்ற இந்த அற்புதமான அமைப்பில் இவை அனைத்தும் இரகசியமாக தீட்டப்பட்டவை” என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்