Aran Sei

‘உழைக்கும் மக்களுக்கு எதிரான மோடி அரசின் அரசப்பயங்கரவாதம்’ – விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம்

டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெற கோரி போராடி வரும் விவசாயிகள் குடியரசு தின டிராக்டர் பேரணியை அறிவித்திருந்தனர். அதில் பங்கேற்கவுள்ள டிராக்டர்கள் டெல்லி எல்லையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்குள் பேரணி தொடங்கும் பகுதிக்கு வந்து சேர தொடங்கியுள்ளன.

வேளாண் சட்டங்களை மஹாராஷ்ட்ராவில் செயல்படுத்த மாட்டோம் – சபாநாயகர் நானா பட்டோல் அறிவிப்பு

மத்திய டெல்லி பகுதிக்குள் பேரணி டிராக்டர்கள் நுழையாத வகையில் பல்வேறு தடுப்புகளை டெல்லி காவல்துறையினர் அமைத்துள்ளனர். முக்கியமாக, சிங்கு எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழையும் கர்னால் புறவழிச்சாலையில் கன்டெய்னர் பெட்டிகளைக் கொண்டு தற்காலிகச் சுவரை காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர்.

இந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்க, காலையிலிருந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் டெல்லி-ஹரியானா எல்லையான சிங்கு எல்லையில் குவியத் தொடங்கியுள்ளனர். பின்னர், சிங்கு எல்லையிலிருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், கஞ்சவாலா சவுக், அச்சாண்டி எல்லை, கேஎம்பி ஜிடி சாலை வழியாக டெல்லிக்குள் நுழைந்துள்ளன.

டெல்லியில் நுழைய முயன்ற விவசாயிகள் மீது காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்கியும் உள்ளனர். காவல் துறையின் அத்துமீறலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து “தில்லி எல்லையோரங்களில் அமைதியாகப் பேரணியில் செல்லும் விவசாயிகளின் மீது கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு. குடியரசு நாளில் குடிமக்களை நசுக்கும் கொடூரம். உழைக்கும் மக்களுக்கு எதிரான மோடி அரசின் அரசப்பயங்கரவாதப் போக்கினை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகளின்_யுகப்புரட்சி வெல்க.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய விவசாயிகளை ஆதரித்து இலங்கையில் போராட்டம் – அதானி குழுமத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல கட்ட போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின்பும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாத மத்திய அரசு, தற்போது  டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை வீசியும், அவர்கள் மீது தடியடி நடத்தியும் உள்ளது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்

மேலும், “விவசாயிகள் மீது குடியரசு தினத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக அரங்கில் நமது நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் பாஜக அரசின் காட்டுமிராண்டித் தனத்தை எடுத்துக்காட்டுகிறது.  உடனடியாக மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென கோருகின்றேன்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்