Aran Sei

ஜனநாயகத்தை நொறுக்கும் மோடி அரசு – புதிய பாராளுமன்றத்தைக் கட்டுவது நகைமுரண் – திருமாவளவன்

பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்த்து நொறுக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசு, புதிதாக பாராளுமன்றத்தைக் கட்டுவது நகைமுரண் என்றும் புதிய பாராளுமன்றம் கட்டும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று தெரிவிக்கிறது .

இணைய வழியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழுவின்  தீர்மானங்களைத் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கிறார்

அத்தீர்மானத்தில்,  மதவாத, சமூகப் பிரிவினைவாத சக்திகளைத் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்கும் வகையில், உரிய செயல் திட்டங்களையும் தேர்தல் வியூகங்களையும் வகுத்திட வேண்டுமென கட்சியின் தலைமைக்கு உயர்நிலைக் குழு வேண்டுகோள் விடுப்பதாகவும், இந்திய விவசாயிகளின் கோரிக்கைகளையும் அறவழிப் போராட்டத்தையும் கட்சி முழுமையாக ஆதரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

“அதிமுக அரசுக்குத் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – திருமாவளவன்

மேலும், வேளாண் துறையை முற்றாக ஒழிக்கவும், விவசாய நிலங்களையெல்லாம் அம்பானி, அதானி ஆகிய பாஜக ஆதரவு கார்ப்பரேட் நிறுவன்ங்களிடம் சட்டவழி ஒப்படைக்க ஏற்றவகையில் பாஜக அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென உயர்நிலைக்குழு மைய அரசை வலியுறுத்துவதாகவும், டிசம்பர் 14 ஆம் தேதி அதானி, அம்பானி நிறுவனங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் கட்சி கலந்துகொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, சென்னை- கல்லறை நகர் பகுதிவாழ் தலித் மக்களின் குடியிருப்புகளைக் கொட்டும் மழையிலும் கொரோனா நெருக்கடியிலும் இடித்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளதையும்  இளையான்குடி, சிறுகுடல் கிராமங்களில் நடைபெற்ற தலித்களின் மீதான தீண்டாமை கொடுமைகளையும், தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத அவலத்தையும் உயர்நிலைக் குழு சுட்டிக் காட்டி,. இப்படியான வன்கொடுமைகளுக்கு எதிராகக் காவல்துறையினர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் சாதிய வாதிகளுக்குத் துணை போவதால் அவை மென்மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றன என்றும் உயர்நிலை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“விவசாயிகள் மீதான தாக்குதல் பாஜகவின் வன்முறை வெறியாட்டம்” – தொல்.திருமாவளவன்

தலித் மக்கள் மீதான இத்தகைய வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய தமிழக அரசை உயர்நிலைக்குழு வன்மையாகக் கண்டிப்பதாகவும் அதேவேளையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாறும் அதிமுக அரசை உயர்நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்போது அனைத்து மக்களுக்கும் இலவசமாகவே அளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவதாக  உயர்நிலை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்த்து நொறுக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசு, புதிதாக பாராளுமன்றத்தைக் கட்டுவது நகைமுரண் என்றும் . புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்டும் பணிகளைத் துவக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய உயர்நிலை குழு, இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புதிய பாராளுமன்றம் கட்டும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்