மாநில அரசின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதைத் தடுக்க கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ‘இந்திய துறைமுக மசோதா 2021-க்கு எம்.எஸ்.டி.சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரி, கடலோர மாநிலங்களைச் சார்ந்த முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, நேற்று (ஜூன் 21), குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய ஒன்பது கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்ட முன்வடிவு குறித்து உங்களின் கவனம் தேவை. சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘இந்திய துறைமுக மசோதா 2021’-ஐ உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க ஜூன் 24 அன்று மாநில முதல்வர்களின் கூட்டத்திற்கு கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் (MSDC) அழைப்பு விடுத்துள்ளது.” என்று நினைவூட்டியுள்ளார்.
“ஏற்கெனவே உள்ள இந்திய துறைமுகங்கள் சட்டம் 1908-ன்படி, திட்டமிடல், மேம்பாடு, ஒழுங்குபடுத்துதல், சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதிய மசோதா இதனை மாற்றுவதாக உள்ளது. இந்த அதிகாரங்களை எம்.எஸ்.டி.சி-க்கு மாற்றுவதாக அமைந்துள்ளது. எம்.எஸ்.டி.சி இதுவரை ஆலோசனை வழங்கும் அமைப்பாக மட்டுமே உள்ளது. மேலும், மாநில அரசின் அதிகாரங்கள் பல ஒன்றிய அரசுக்குச் செல்லும் வகையில் புதிய மசோதா அமைந்துள்ளது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கெனவே உள்ள சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் ஆனால், புதிய மசோதா சிறு துறைமுகங்களை நிர்வகித்தலில், நீண்டகால பாதகமான விளைவுகளை உருவாக்கும் என்றும் அவர் அக்கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
“ஏனெனில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநில அரசு இதில் எந்தவொரு முக்கியப் பங்கையும் ஆற்ற முடியாது. நாங்கள் ஏற்கெனவே இந்த விவகாரத்தை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திடம் கொண்டுசென்றுள்ளோம். மாநிலத் தன்னாட்சியை இதன் மூலம் குறைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“எனவே, இப்புதிய மசோதாவுக்கு அனைத்துக் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதைத் தடுக்க கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இப்புதிய மசோதாவுக்கு எம்.எஸ்.டி.சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.” என்று கடலோர மாநிலங்களைச் சார்ந்த முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.