Aran Sei

குட்கா விவகாரத்தில் திமுக மீதான நோட்டீஸ் ரத்து: குட்கா அரசின் ஆட்டம் முடியப் போவதாக  ஸ்டாலின் திட்டவட்டம்

ட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்கள் எடுத்துச் சென்ற விவகாரத்தில் பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது

2013ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வெளிப்படையாகச் சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பதை அரசின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுசெல்லும் நோக்கில், 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள்  குட்காவை திமுக உறுப்பினர்கள்  கொண்டு சென்றனர்.

இது சட்டப்பேரவையின் உரிமையை மீறிய செயல் என்பதால், இது தொடர்பாகப் பேரவை உரிமை குழுவிற்கு பேரவை தலைவர் பரிந்துரை ஒன்றை அளித்தார். அந்தப் பரிந்துரையில் விசாரணை நடத்துவதற்காகத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான பேரவை உரிமைக் குழுவால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் அதிமுக, பாஜக  கூட்டணி – மருத்துவர் எழிலன் குற்றச்சாட்டு

இந்த நோட்டீஸை எதிர்த்து அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படை தவறுகள் இருப்பதாகக் கூறி அதன் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இருந்தாலும், தவறுகளைக் களைத்துவிட்டு புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்று தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, பேரவை உரிமைக்குழு கூடி  இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை  எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வமும் புதிதாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இந்நிலையில், அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது.

தமிழக ஆளுநர் உரை – ” அதிமுகவின் இரட்டை வேடம்; காவு கொடுக்கப்படும் மாநில உரிமைகள் “

அப்போது, சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்  ஆஜராகி,“ச ட்டசபைக்கு என்று ஒரு மரபுள்ள து. முன் அனுமதி எதுவும் பெறாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை உள்ளே கொண்டு வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஒருபோதும் பெரும்பான்மைக்கு குறைவு ஏற்பட்டது இல்லை. எனவே பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதாகத் திமுக உறுப்பினர்கள் கூறுவது ஏற்புடையது அல்ல.” என்று வாதிட்டார்.

உரிமைக்குழு சார்பில்  அரசின் மூத்த சிறப்பு வழக்கறிஞர் ஏ.எல். சோமையாஜி ஆஜராகி, “உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டுதான், உரிமைக்குழு புதிய நோட்டீஸை வழங்கியுள்ளது.” என்று சுட்டிக்காட்டினார்.

‘சசிகலாவை சாக்கடையுடன் ஒப்பிடும் குருமூர்த்தி; அமைதிகாத்து ஆமோதிக்கிறதா அதிமுக?’ – திமுக கேள்வி

மேலும், “உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட குட்கா பொருளைக் கொண்டு வந்து காட்சி படுத்தியதற்கு என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸில் சபாநாயகரின் அனுமதியின்றி குட்கா பொருளைக் காண்பித்ததற்காக எனத் திருத்தப்பட்டுள்ளது. அவை செயல்படுவதற்கு குந்தகம் ஏற்படுத்தியதால், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த சபாநாயகர், உரிமைக்குழுவை விசாரிக்க உத்தரவிட்டார். அதன் பேரிலேயே தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

அப்போது நீதிபதி, எந்தெந்த பொருட்களைக் கொண்டு வருவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று எழுப்பிய கேள்விக்கு, பேரவை உரிமைக்குழு தரப்பில், “எது உரிமை, எது உரிமை மீறல் என்பதற்கு ஏதும் பாராளுமன்றத்தாலோ, சட்டமன்றத்தாலோ வரையறை செய்யப்படவில்லை. மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் அடிப்படையில் அவை முடிவு செய்யப்படுகிறது. ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்பொழுது புகை பிடிக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லாதபோதும், அது நீதிமன்றத்தில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் என்பதைப் போல் தான் சட்டமன்ற நடவடிக்கையும். பேச்சுரிமை என்ற போர்வையில், தடை செய்யப்பட்ட பொருளை ஊக்குவிக்கும் வகையிலான செயலை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டனர். இது சட்டப்பேரவை நடவடிக்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்.” என்று குற்றம்சாட்டப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடம் – ‘முதல்வர் பழனிசாமி ஜமுக்காளத்தில் வடிகட்டி அண்ட புளுகைப் புளுகுகிறார்’ – திமுக கண்டனம்

மேலும், சபாநாயகர் உரிமைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், உரிமைக்குழு அதன் முடிவைப் பேரவையில் தாக்கல் செய்யும் எனவும், அதன் பின்னர் பேரவை தான் இதில் இறுதி முடிவெடுக்கும் எனத் தெரிவித்து, பேரவையின் இறுதி முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கு தொடரும் பட்சத்தில், அப்போதுதான் இதில் நீதிமன்றம் தலையிட முடியும் எனவும், தற்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட  முகாந்திரம் இல்லையென உரிமைக்குழுவால் வாதிடப்பட்டது.

திமுக தரப்பு வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த்  திவாரி மற்றும் கு.க.செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீசை தலைமை நீதிபதி  அமர்வு ரத்து செய்தபோது, இந்த விவகாரம் நடந்து (2017) மூன்றாண்டுகள் ஆகி விட்டதால், அதனை அடிப்படையாக வைத்துத் தற்போது தண்டிக்க முடியாது எனத் தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய நிலையிலும் தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவைப் பொருத்திப் பார்க்க வேண்டுமெனவும் வாதிட்டனர்.

பொதுமக்கள் மீதான ஊரடங்கு கால வழக்குகள் : ’கேள்விக்குறியான இளைஞர்களின் எதிர்காலம்’ – ஸ்டாலின் கண்டனம்

மேலும், உரிய காரணங்கள் ஏதுமின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே, உரிமைக்குழு இந்த விவகாரத்தில் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டு அது உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சபாநாயகர் அனுமதி இல்லாமல் கொண்டு வந்தார்கள் எனப் பெயருக்குத் திருத்தம் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளதாலும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளதாலும் காழ்ப்புணர்ச்சி வெளிப்படக்கூடும் என்பதால், உரிமை குழுவிலிருந்து தாங்களாகவே ஒ.பன்னீர்செல்வம் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் விலகிக் கொள்ள வேண்டுமெனவும், தேவைப்பட்டால் சபாநாயகர் புதிய குழுவை அமைத்துக் கொள்ளட்டும் என்று தெரிவித்தனர்.

தொல்லியல் துறையில் தமிழ் – பணிந்தது மத்திய அரசு

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிசம்பர் 4ஆம் தேதி வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று (பிப்பிரவரி 10) இந்த வழக்குகளில் நீதிபதி அளித்த தீர்ப்பில், இரண்டாவது நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டுசென்று காண்பித்தோம். கமிஷன் வாங்கிக் கொண்டு அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

“முதல் முறையே இந்த நடவடிக்கைக்குத் தடை போட்டது உயர் நீதிமன்றம். அடங்காமல் மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயர் நீதிமன்றம். இந்த வேகத்தைக் குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறார்கள். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது. குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும்.” என்று திமுக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்