Aran Sei

மத்திய பிரதேசத்தில் மழை வேண்டிச் சிறுமிகளை வைத்துக் கிராமத்தினர் நடத்திய பூஜை – மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கோரிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

த்திய பிரதேசம் மாநிலம் தாமோ மாவட்டத்தில், மழை கடவுளை வேண்டிச் சிறுமிகளை வைத்துக் கிராமத்தினர் பூஜை செய்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரியுள்ளது.

தாமோ மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டல்கண்ட் பகுதியில், ஜபேரா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பனியா கிராமத்தில் இந்த பூஜை நடைபெற்றிருப்பதாக மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வழக்கத்தின்படி,  மழைக் கடவுளை மகிழ்விக்கும் விதமாக சிறுமிகள் நிர்வாணமாக அணிவகுத்து அழைத்துச் செல்லப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது என தாமோ காவல் கண்காணிப்பாளர் தெனிவர் கூறியுள்ளார்.

இந்த நடைமுறையின் மூலம், மழை பெய்யும் என கிராம மக்கள் நம்புவதாக கூறிய அவர், “இந்த விவகாரம்குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சிறுமிகள் நிர்வாணமாக நடக்க நிர்பந்திக்கப்பட்டனர் என்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையின்படி, ”தவளையுடன் கட்டப்பட்ட மரத்துண்டை தோளில் சுமந்தபடி சிறுமிகள் நிர்வாணமாக நடக்க வைக்கப்படுகின்றனர். அவர்களுடன் வரும் பெண்கள் பஜனைகளை பாடியபடி வருகின்றனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ். கிருஷ்ண சைதன்யா கூறியுள்ளார்.

இது தொடர்பாக கிராமத்தினரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை எனக் கூறிய அவர், “இந்த நடைமுறையில் அவர்களின் பெற்றோர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மூடநம்பிக்கைகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”இது போன்ற நடவடிக்கைகளில், மூடநம்பிக்கைகள்குறித்து கிராமத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நடைமுறைகள் விரும்பிய முடிவுகளை தராது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கவும் மட்டுமே நிர்வாகத்தால் முடியும்” என எஸ். கிருஷ்ண சைதன்யா கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவத்தின் இரண்டு காணொளிகள் வெளியாகியுள்ளன. முதல் காணொளியில், ஆடைகள் இல்லாமல் சிறுமிகள் (சுமார் 5 வயது வரை தோற்றமளிக்கும்) அருகருகே தவளை கட்டப்பட்ட மரத்துண்டை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக செல்கின்றனர். அவர்களுடன் செல்லும் பெண்கள் பஜனை பாடியபடி ஊர்வலத்தைத் தொடர்ந்து சென்றது அந்தக் காணொளியில் பதிவாகியிருந்தது.

மற்றொரு காணொளியில், மழை இல்லாமல் நெற்பயிர்கள் காய்வதால் இந்தச் சடங்கு நடத்தப்படுவதாக பெண்கள் சொல்வது காணப்படுகிறது.

இந்தச் சடங்கு மழையை கொண்டு வரும் என நாங்கள் நம்புகிறோம் என அந்தக் காணொளியைப் பதிவு செய்யும் நபர்களிடம் அந்தப் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்