Aran Sei

‘விவசாயிகளின் போராட்டத்தினால், பிரதமர் மிகவும் வேதனையடைந்துள்ளார்’ – ராஜ்நாத் சிங்

விவசாயிகளின் போராட்டத்தால், நான் மட்டுமல்ல பிரதமர் மோடியும் மிகவும் வேதனையடைந்துள்ளார் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிற்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத்திற்கும் இடையேயான ஆறாவது கட்டப்பேச்சுவார்த்தை, இன்று (டிசம்பர் 30) மதியம் 2 மணி அளவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு : ’நேர்மையான நோக்கத்துடன் தீர்வு காண விரும்புகிறோம்’ – விவசாயிகள்

இது குறித்து, நேற்று (டிசம்பர் 29) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நம் சீக்கிய சகோதரர்கள் இந்திய பண்பாட்டை காத்து வருபவர்கள். நம் நாட்டின் சுய மரியாதையை பாதுகாத்ததற்காக அனைவருடைய நினைவில் இருப்பார்கள். அவர்களின் நேர்மை குறித்து எந்தக் கேள்வியும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மீது நாங்கள் உணர்ச்சிபூர்வமான பந்தத்தில் இருக்கிறோம் என்றும் அவர்கள் போராட்டங்கள் நடத்துவதால் நான் மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடியும் மிகவும் வேதனைப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசோடு பேச்சுவார்த்தைக்குத் தயார் : நான்கு அம்ச கோரிக்கையை முன்மொழியும் விவசாய சங்கங்கள்

மேலும்,“பொய்யான குற்றச்சாட்டுகளை விவசாயிகள் மீது யாரும் வைக்கக்கூடாது. அவர்கள் மீது நாங்கள் பெரிய மரியாதையை வைத்திருக்கிறோம். அவர்கள் எங்கள் அன்னதாதாக்கள் (உணவு வழங்குபவர்கள்).” என்று கூறியுள்ளார்.

“சில தீய சக்திகள் விவசாயிகளிடையே தவறான கருத்துக்களைப் பரப்ப முயற்சிக்கிறார்கள். நாங்கள் விவசாயிகளிடமும் பேசி வருகிறோம். விவசாயிகளிடம் என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். விவசாய சட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். மாறாக, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதிலை மட்டும் தெரிவிக்க சொல்லி மத்திய அரசை கேட்கக்கூடாது. நாம் இந்த விவகாரத்தில் ஒரு தீர்மானத்தை அடைவோம்.” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்