Aran Sei

‘எழுவர் விடுதலையே எங்கள் நோக்கம்; 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்படும்’ – முதல்வருடனான சந்திப்புக்கு பின் அமைச்சர் ரகுபதி தகவல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையே எங்கள் குறிக்கோள் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல, ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவெடுப்பார் என்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி உறுதியளித்துள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ”கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கான சில விதிவிலக்கான மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே 50 சதவீத விதியை தளர்த்த முடியும்.” என்று உத்தரவிட்டது.

ஆனால், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா உட்பட சில மாநிலங்கள், 60 சதவீதத்திற்கும் மேல் இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.

“எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும்?” என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்வி தவறானது – காஞ்சா அய்லய்யா

அண்மையில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில், மராட்டியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில்  இடஒதுக்கீடு வழங்கும் மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், மாநில அரசுகள் வழங்கும் இடஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக் கூடாது என்கிற இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று (மே 11) மாலை, இந்த இட ஒதுக்கீடு விவகாரம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதில், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனைக்குப் பிறகு, இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி,  “இந்திரா சஹானி வழக்கு தீர்ப்பின் அடிப்படையில்தான் மராத்திய இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திரா சஹானி வழக்குக்குப் பிறகுதான், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்துக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மராத்தா இடஒதுக்கீடு ரத்து; 50% கட்டுப்பாட்டை மறுபரிசீலினை செய்ய நீதிமன்றம் மறுப்பு; 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து

தற்போது மராத்திய இட ஒதுக்கீடு வழக்கில் வழங்கப்பட்ட 500 பக்க தீர்ப்பை படித்து அரசு தலைமை வழக்கறிஞர் முதல்வரிடம் உரிய முடிவை தெரிவிப்பார் என்று குறிப்பிட்ட அவர், “தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதுதான் முதல்வரின் நோக்கம். இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டு, அது நிலைநிறுத்தப்படும்.” என்று கூறியுள்ளார்.

மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையே எங்கள் குறிக்கோள் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல, ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் நல்ல முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் ரகுபதி உறுதியளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்