Aran Sei

’அதிமுகவில் இருந்துகொண்டு சசிகலாவையும் அமமுகவையும் புகழக்கூடாது’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

திமுகவில் இருந்து கொண்டு சசிகலாவையும், அமமுகவையும் உயர்த்தி பேசக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார்.

சமீபத்தில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அமமுகவைச் சேர்ந்தவர்களைச் சகோதரர்கள் என்று தெரிவித்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, “ சசிகலா கட்சியின் தலைவராக இருந்தவர். அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையாக போற்றக் கூடியவர். அம்மாவுடன் இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர்.’’ என்றும் கூறியிருந்தார்.

‘தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா’ – அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேட்டி – மீண்டும் உடைகிறதா அதிமுக?

இந்நிலையில், நேற்று (ஜனவரி 15) மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, சசிகலா, அமமுக தொடர்பான அக்கட்சியினரின் கருத்து குறித்து அவர் பேசிய போது, “அதிமுகவின் கொள்கையை 2017 ஆம் ஆண்டே தெளிவுபடுத்தியுள்ளோம். சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் தலையீடுகள் இன்றி அதிமுக கட்சியும் ஆட்சியும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “அதனால், அந்த நிலையில் நாங்கள் தெளிவாக உள்ளதால் எங்களுக்கு எந்தக்குழப்பமும் இல்லை. ஆனால், கோகுல இந்திரா அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவை உயர்த்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளுக்கு ஒத்துழைப்புதருவதுதான் முக்கியம்.” என்று ஜெயக்குமார் கண்டித்துள்ளார்.

முன்கூட்டி விடுதலை செய்ய சசிகலா மனு – சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரூபா தகவல்

அதேபோல், ராஜேந்திர பாலாஜி கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியவர், “ நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின்  இரட்டை இலைசின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் சகோதரர்களா? கட்சி ஒரு முடிவெடுத்துவிட்ட பின், அதை பின்பற்ற வேண்டும். இரட்டை இலையும் சின்னமும் அதிமுகவின் சொத்து. இந்த மாதிரியாக கருத்துக்களை யாரும் சொல்லக் கூடாது.” என்று எச்சரித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்