இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக யூனைடட் சர்வீஸ் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா (United service institute of India) என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், மேற்கூறிய ஆய்வு நிறுவனத்திற்காக, கர்னல் ஏ.கே.மோர் இந்த ஆய்வை மேற்கொண்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகளாலோ அல்லது எதிரிநாட்டு படையினராலோ உயிரிழப்பதை விட, தற்கொலை, சக படையினரால் தவறுதலாக கொல்லப்படுவது மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் மரணங்களே அதிகம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில், இந்திய ராணுவ வீரர்களுக்கு, ராணுவ நடவடிக்கை மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் மன அழுத்தம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத்தை எதிர்த்த பணியில், பல காலம் தொடர்ந்து பணியாற்றுவது, மன அழுத்தம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ நடவடிக்கையால் ஏற்படும் மன அழுத்தத்தை புரிந்துகொள்ளலாம் என்று கூறும் ஆய்வறிக்கை பிற காரணங்களால் ஏற்படும் மன அழுத்தம், அந்த ராணுவ வீரரின் உடல் நலத்தை மட்டுமின்றி அவர் சார்ந்த படையணியையும் பாதிப்பதாக தெரிவித்துள்ளது.
அந்தவகையில், ராணுவத்தில் உள்ள கீழ் நிலை அதிகாரிகளைவிட, உயர் அதிகாரிகளே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாக அறிக்கை தெரிவிக்கின்றது.
ராணுவ வீரர் என்ற பெருமையும், செய்யும் பணியில் நிறைவும், கீழ் நிலை அதிகாரிகளிடம் மட்டுமே இருப்பதாக கூறும் ஆய்வறிக்கை, அதிகாரிகள் மத்தியில் இது அதிகரிக்கும் பிரச்சனையாக உள்ளதாகவும் இதில், அரசின் உடனடி தலையீடு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பணி நிலைமைகளிலும், தீவிரவாதம் அதிகம் உள்ள இடங்களில் பணிபுரிவதற்கு, கீழ் நிலை ராணுவ வீரர்கள் தாங்களாக முன் வந்தாலும், உயர் அதிகாரிகளுக்கு அவர்களுக்கு இணையான நம்பிக்கை இருப்பதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில், ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலாண்மை நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை என்றும், மன அழுத்தத்தை தடுப்பது மற்றும் எதிர்கொள்வதற்கு ராணுவத்தின் அனைத்து படிநிலைகளிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறமையற்ற தலைமை, அதிகப்படியான வேலை பளு, போதுமான சாதானங்கள் வழங்கப்படாமை, அடிக்கடி பணியிடங்களை மாற்றுவது, பதவி உயர்வு வழங்குவதில் வெளிப்படைத் தன்மையில்லாமை, பதவி மற்றும் சம்பள குறைப்பு, விடுமுறை வழங்காமல் இருப்பது போன்றவை, நிர்வாக ரீதியான மன அழுத்தங்களுக்கு காரணமாக இருப்பதாக யூனைடட் சர்வீஸ் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.