Aran Sei

‘கிரிஜா வைத்தியநாதனை வட அல்லது மேற்கு மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நியமிக்க வேண்டும்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா

கிரிஜா வைத்தியநாதனை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்குப் பதிலாக வட மண்டல அல்லது மேற்கு மண்டல அமர்வில் கிரிஜா வைத்தியநாதனை நியமிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 18) அவர் வெளியிட்ட அறிக்கையில், “பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதனை நியமித்த்து செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஒன்பது மாதங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராகவும், 19 மாதங்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும், சுகாதாரத் துறைச் செயலாளராகவும் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு கிரிஜா வைத்தியநாதன் பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராகத் தகுதி பெறுகிறார் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கின்றது.” என்று தெரிவித்துள்ளார்.

“நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும்” – உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் மேல்முறையீடு செய்ய முடிவு

அரசு நிர்வாக ரீதியிலான பொறுப்புகளைக் கவனித்ததினால் மட்டுமே அவரை நிபுணத்துவம் பெற்றவராகக் கருத முடியாது என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வாதத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்று பேராசிரியர் எம். எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

கிரிஜா வைத்தியநாதன் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தவறான முன்னுதாரணத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் காட்டியுள்ளது என்றும் நிர்வாக ரீதியாகப் பெற்ற அனுபவத்தை நிபுணத்துவமாகக் கருதுவது, யார் வேண்டுமென்றாலும் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்வதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசுமை தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் – சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு

மேலும், “இச்சூழலில் பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கிரிஜா வைத்தியநாதன் நிபுணத்துவ உறுப்பினராகப் பொறுப்பேற்றால் அவர் தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்துத் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்படும் வழக்குகள் குறித்து முடிவு செய்யும் நிலை கிரிஜா வைத்தியநாதனுக்கு ஏற்படும். இது அறநெறி முறைகளுக்கு முரணாக அமையும்.” என்று பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கிரிஜா வைத்தியநாதனை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்குப் பதிலாக வட மண்டல அல்லது மேற்கு மண்டல அமர்வில் கிரிஜா வைத்தியநாதனை நியமிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதாக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்