Aran Sei

தேசிய மனிதஉரிமை ஆணைய தலைவராக அருண் மிஸ்ரா நியமனம்: சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவென எம்.எச்.ஜவாஹிருல்லா விமர்சனம்

ச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நாளினை அந்த ஆணையத்திற்கு சவக்குழி வெட்டப்பட்ட நாளாக கருதுகிறேன் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

இன்று (ஜூன் 3), எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், “தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் எதிர்ப்பைப் புறந்தள்ளி விட்டு, அருண் மிஸ்ரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அருண் மிஸ்ரா தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நாளினை அந்த ஆணையத்திற்கு சவக்குழி வெட்டப்பட்ட நாளாக கருதுகிறேன்.” என்று விமர்சித்துள்ளார்.

“உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் மனிதஉரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் அரசு சார்பாக தீர்ப்பளிப்பதையே வழமையாகக் கொண்டிருந்தவர் அருண் மிஸ்ரா. வன உரிமைச் சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு விசாரணையின் போது வனப்பகுதியில் வாழும் ஏழை மக்களை வெளியேற்ற இவர் அளித்த உத்தரவு கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. அமித்ஷா தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த வழக்கை, இவரது தலைமையிலான அமர்வு விசாரிக்க அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணித்ததைக் கண்டித்து தான் கடந்த ஜனவரி 2019ல் நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய், செல்லமேஸ்வரர், மதன் லோகூர் மற்றும் ஜோசப் குரியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

மனிதஉரிமைகள் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி நியமனம் – மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

“அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் எப்போதுமே மோடி அரசுக்கு ஆதரவாக அல்லது அதன் முக்கிய தலைவர்களுக்கு ஆதரவாகவே அருண் மிஸ்ரா தீர்ப்பளித்துள்ளார். சஹாரா பிர்லா ஊழல் வழக்கு, சஞ்சீவ் பட் வழக்கு, ஹரன் பாண்டே வழக்கு, சிபிஐ உள்விவகார வழக்கு முதலியவை இந்த வழக்குகளில் அடங்கும். ஐநா மனிதஉரிமை ஆணயத்தினால் அமைக்கப்பட்ட தேசிய மனிதஉரிமை நிறுவனங்களின் பன்னாட்டு கூட்டமைப்பு தேசிய மனித உரிமை ஆணையங்களின் செயற்பாடுகள்குறித்து வகுத்துள்ள பாரிஸ் கோட்பாடுகளுக்கு முரணாக அருண் மிஸ்ராவின் நியமனம் அமைந்துள்ளது.” என்று எம்.எச்.ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஒய்வுப் பெற்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளே நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும்  2019-ல் மோடி அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தலைமை நீதிபதி அல்லாத அருண் மிஸ்ரா மனிதஉரிமை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பது இவருக்காவே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மாண்புகளை கேலிக்குள்ளாக்கும் பிரதமர் – ப.சிதம்பரம் கடும் கண்டனம்

“அருண் மிஸ்ராவை விட அனுபவம் வாய்ந்த தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் தற்போதைய உறுப்பினரான நீதியரசர் பி.சி. பந்த் ஏன் தலைவராக நியமிக்கப்படவில்லை. அல்லது உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பானுமதி மற்றும் இந்து மல்கோத்ராவின் பெயர்கள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை. தேசிய மனிதஉரிமை ஆணையத்திற்கு ‘ஏ’ தகுதி 2017ல் வழங்கப்பட்ட போது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்வோம் என்று இந்தியாவின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.” என்று எம் எச் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

“ஜனவரி 2020-ல் 24 நாடுகள் பங்கு கொண்ட பன்னாட்டு நீதித்துறை மாநாட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் அப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நிலையில் உரையாற்றிய அருண் மிஸ்ரா பிரதமர் மோடி உலகம் போற்றும் தூரப்பார்வையுடைய ஆளுமை என்றும் அவர் துடிப்புமிக்க பேரறிவாளர் என்றும் அவர் சர்வதேச அளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்துபவர் என்றும் புகழ்ந்தார்.” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

‘இந்துத்துவ பயங்கரவாதத்தின் பழி வாங்கலால் சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுக்க வேண்டும்’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணி வேண்டுகோள்

“இந்த புகழ்மாலைக்காக மரபுகளை மீறி அரசு சார்பு ஒன்றை மட்டுமே இலட்சியமாக கொண்டிருக்கும் ஒருவருக்கு தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் பதவி அளித்திருப்பது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் நலனை கவனத்தில் கொண்டு குடியரசு தலைவர் அருண் மிஸ்ராவை தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தனது அறிக்கையில்ம் கேட்டுக்கொடுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்