Aran Sei

“அப்பாவிகள் ரத்தம் சிந்துவது நிறுத்தப்பட வேண்டும்” – காஷ்மீர் பேரணியில் முழக்கம்

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு துணைநிலை ஆளுநர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவ்ர மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.

காவல்துறை மற்றும் ராணுவத்தின் கூட்டு நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு மெகபூபா முக்தி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், ஞாயிற்றுக்கிழமை (21.11.21) மெகபூபாவின் வீட்டிலிருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணி நடத்தினர்.

இந்த பேரணியின் போது “அப்பாவிகள் ரத்தம் சிந்துவது நிறுத்தப்பட வேண்டும்” என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 15 ஆம் தேதி ஸ்ரீநகரின் ஹைதர்பூரா பகுதியில் காவல்துறையும் ராணுவமும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் 4 பேர் சுட்டுக்கொலை; உறவினர்கள் போராட்டம் – மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு அரசு உத்தரவு

கொல்லப்பட்டவர்களில் ஒருவரான மருத்துவர் முதாசிர் கவுர் என்பவரின் மனைவி ஹூமைரா “என்னுடைய கணவர் பயங்கரவாதி என்று நிரூபித்தால் என்னையும், என்னுடைய இரண்டு வயது மகளையும் காவல்துறை சுட்டுக்கொல்லட்டும்… தற்போது என்னுடைய மகளை அவருடய தந்தையின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க அனுமதியுங்கள்” என்று கூறினார்.

இதேபோல், கொல்லப்பட்ட அல்தாஃப் பட் என்பவரின் சகோதரரான மருத்துவர் அனீஃப் அகமது, தன்னுடைய சகோதரருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை என்று காவல்துறையே கூறியுள்ளபோதும், அவருடைய உடலை தர மறுப்பதாக குற்றம்சாட்டினார்.

சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொரு நபரான அமில் அஹமத் என்பவரின் தந்தை அப்துல் லத்தீஃப் “அவன் உதவியாளராக வேலை பார்த்து வந்தான். எங்களுடைய குடும்பம் பயங்கரவாதிகளை கொலை செய்த அச்சத்தால் இடம் பெயர்ந்து வந்தது. தற்போது எங்களையே பயங்கரவாதிகள் என்று கூறுகிறார்கள்” என்று தெரிவித்ததாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் வீட்டுக் காவலில் மெகபூபா முப்தி – மனிதாபிமானமற்ற செயற்களின் புதிய ஆழங்களை ஒன்றிய அரசு தொட்டுள்ளதாக குற்றச்சாட்டு

உறவினர்கள் நடத்திய போராட்டம் மற்றும் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவாக எழுப்பிய குரல்களுக்குப் பிறகு, சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பேரின் உடலை காவல்துறை உறவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கொல்லப்பட்ட அமீர் மக்ரே என்பவரின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று மெகபூபா முஃப்தி கோரிக்கை வைத்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நான்கு பேரின் உடலையும் காவல்துறையினர் ஹைதர்பூரா பகுதியிலேயே புதைத்துவிட்டனர். உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டுபேரின் உடல்களை மட்டும் தற்போது உறவினர்களிடம் காவல்துறை ஒப்படைத்துள்ளது. இதற்கிடையில், ஹைதர்பூரா துப்பாக்கிச் சூடு தொடர்பாக, மாவட்ட நீதிபதி விசாரணைக்கு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்