Aran Sei

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டால்தான் அமைதி கிடைக்கும்; மக்களோடு பேசுங்கள் – ஒன்றிய அரசை வலியுறுத்திய மெகபூபா முப்தி

பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, காஷ்மீர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் வரை இங்கு முழு அமைதியும் கிடைக்காது என்று கூறியுள்ளார்.

ஜம்முவில் ஒரு வார கால சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான நேற்று (மார்ச் 26) ரம்பனில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் உரையாற்றியுள்ள மெகபூபா முப்தி, “கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் ஒரு தீர்வுக்காக காத்திருக்கிறது.  காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இப்பகுதியில் அமைதி திரும்பாது. அதற்காக பாகிஸ்தானுடனும், ஜம்மு காஷ்மீர் மக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் பாகிஸ்தானுக்கு பயணம் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் (பாஜக) ஏன் நாங்கள் அதைப் பற்றி பேசும்போது (பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து) பிரச்சனை செய்கிறார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்: ‘தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் அண்ணாமலை’ –செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

“தற்போதைய அரசாங்கம் காஷ்மீரின் இளைஞர்களை சிறைகளுக்கு அனுப்புவதன் வழியாக ஒடுக்குமுறையின் மொழியை மட்டுமே எங்களிடம் பேசுகிறது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யப்பட்ட பிறகு, பிரச்சனைகள் எல்லாவற்றையும் சரியாகிவிட்டதாக பாஜக கூறுகிறது. அவர்கள் சொல்வது உண்மை என்றால், காஷ்மீரில் 10 லட்சம் இராணுவ வீரர்களை நிறுத்தப்பட வேண்டிய அவசியம் என்ன?” என்று மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“காஷ்மீரின் ஆட்சியை பாஜக கைப்பற்ற பார்க்கிறது. அதன் வழியாக, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, அரசியலமைப்பிற்கு முரணாகவும் சட்டவிரோதமான வகையிலும் எடுக்கப்பட்ட முடிவை ‘சரியானது’ என சட்டப்பேரவையில் வைத்து மற்ற முயல்கிறது. அவர்களின் முயற்சியை தோற்கடிக்க நமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் பண்டிட்கள் கொண்டாடும் ஹெராத் பண்டிகை – வாழ்த்துகளை பகிரும் இஸ்லாமியர்கள்

“நாங்கள் மகாத்மா காந்தியின் இந்தியாவுடன் இணைந்தோம். ஆனால், அவர்கள் அதை அவரை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் இந்தியாவாக மாற்ற விரும்புகிறார்கள். ஜம்மு காஷ்மீர் ஏற்கனவே அவர்களின் கைகளில் இருந்து நழுவிவிட்டது. சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அது மேலும் நழுவிவிடும்” என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் மெகபூபா முப்தி உரையாற்றியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்