Aran Sei

காஷ்மீர்: தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரம் – குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியில் விரிசல்

credits : indian express

மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலைச் (டிடிசி) சந்திக்கும் குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியில் (People’s  Alliance for Gupkar Declaration-PAGD) தொகுதி பங்கீடு மற்றும் இடப்பகிர்வால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தையளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-தை ரத்து செய்ததற்கு எதிராகவும், மீண்டும் 370-வது சட்டப் பிரிவைக் கொண்டுவரக் கோரியும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ்,  ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவாமி தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து கடந்த அக்டோபர் 15ம் தேதியன்று  குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி (பிஏஜிடி) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். .

ஜம்மு காஷமீருக்கு சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் குப்கார் பிரகடன மக்கள் கூட்டணியின் தலைவராக பரூக் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். இதன் துணைத் தலைவராக மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில், பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர் 28 முதல் டிசம்பர் 24 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலை பிஏஜிடி கூட்டணி  இணைந்து சந்திக்கும் என் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பிஏஜிடி கூட்டணி  தொகுதி பங்கீடு மற்றும் இட பகிர்வு குறித்து கூட்டணி கட்சிகளுக்குள் பல கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மக்களுடைய உணர்வுகளையும் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் இறுதி முடிவை காங்கிரசின் உயர் மட்ட திட்டக் குழு எடுக்கும் என காங்கிரசின் செய்தி தொடர்பாளர் ரவிந்திர ஷர்மா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் ஒற்றை சிந்தனையுள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  ஷர்மா தெரிவித்துள்ளார்.

பிஏஜிடி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியிருந்தாலும் தொடர்ந்து  கூட்டணிக்குள்  குழப்பம் நீடித்துக் கொண்டே வருகிறது.  மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் பிஏஜிடியால் நடத்தப்பட்டிருந்தாலும் இன்னும் சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை.

மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலால் கூட்டணிக்குள் தொடர்ந்து குழப்பம் ஏற்படுவதை குறிப்பிட்டு  மெஹ்பூபா முப்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”ஒரு பெரிய குறிக்கோளை கொண்டிருக்கும் பிஏஜேடி கூட்டணி இது போன்ற தேர்தல் சண்டைகளில் ஈடுபட கூடாது” என கூறியுள்ளார்.

மெஹ்பூபா முப்தியின் கருத்துக்களுடன் உடன்படுவதாக கூட்டணியில் உள்ள ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் லோன் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்