Aran Sei

இந்தியாவும் பாகிஸ்தானும் உரையாடலைத் தொடங்க வேண்டும் – மெஹ்பூபா முஃப்தி

Image Credits: Scroll

ந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் அழுத்தத்திலிருந்து வெளியே வந்து ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முஃப்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீரென மூண்ட சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் மரணமடைந்துள்ளனர். உரி பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு வீரர்களும், குரேஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரரும் மரணமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், பொது மக்களில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு ராணுவ வீரர்களும், நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் ஆகியோரால் போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை மீட்டெடுப்பதின் மூலம் இந்த உரையாடலைத் துவங்கலாம் என்று மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெஹ்பூபா முஃப்தி, “எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருபுறத்திலும் பெருகிவரும் உயிரிழப்புகளைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்திய மற்றும் பாகிஸ்தான் தலைமைகளால் அரசியல் அழுத்தங்களை தண்டி ஒரு உரையாடலைத் தொடங்க முடியும். வாஜ்பாய் மற்றும் முஷாரஃப் ஆகியோரால் ஒப்புக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்ட போர்நிறுத்தத்தை மீட்டெடுப்பது, இதற்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்