சிபிஐ விசாரணைக்கு மாநிலங்கள் வழங்கியுள்ள பொது அனுமதி ஒப்புதலை திரும்பப் பெறும் ஒன்பதாவது மாநிலமாக பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மேகாலயா மாறியுள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் நேற்று (மார்ச் 3) நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மிசோரம் மாநிலத்துடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களான மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கேரளா ஆகிய ஏழு மாநிலங்கள் சிபிஐ விசாரணை அமைப்பிற்கான பொது அனுமதி ஒப்புதலை திரும்பப் பெற்றிருக்கின்றன.
மேகாலயாவின் முதலமைச்சரும் தேசிய மக்கள் கட்சித் தலைவருமான கான்ராட் சங்மா தலைமையிலான ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) பாஜகவும் இடம் பெற்றுள்ளது.
இந்த எட்டு மாநிலங்களில் பல்வேறு வழக்குகளை விசாரிக்க 150 கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
சிபிஐயின் செயல்பாடுகளானது டெல்லி சிறப்புக் காவல் நிறுவனம் (டிஎஸ்பிஇ) சட்டம், 1946 ஆல் நிர்வகிக்கப்படுகிறது. ஆகவே, ஒரு மாநிலத்தில் ஒரு குற்றத்தை விசாரிக்கத் தொடங்கும் முன் சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலைக் கட்டாயமாகப் பெற வேண்டும்.
‘சிபிஐக்கு புதிய அதிகாரம்’ – தனி சட்டம் இயற்றக் கோரி ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஒரு மாநில அரசு வழங்கும் ஒப்புதல் என்பது ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பானதாக மட்டுமோ அல்லது சிபிஐ-யின் அனைத்து வழக்குகளுக்கான பொதுவான அனுமதியாகவோ இருக்கலாம். அவ்வகையில், இந்த பொதுவான அனுமதியைதான் மேகாலயா தற்போது திரும்பப் பெற்றுள்ளது.
பொதுவான அனுமதி திரும்பப் பெறப்பட்ட மாநிலங்களில், ஒவ்வொரு வழக்குகளுக்கும் பிரதியேகமாக மாநில அரசுகளிடம் சிபிஐ அனுமதி கோர வேண்டும்.
ஒரு மாநிலத்தில் ஒரு குற்றத்தை விசரணை நடத்த சிபிஐக்கு உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ உத்தரவிட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனுமதி சிபிஐக்கு தேவையில்லை.
Source: PTI, IndiaToday
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.