விவசாய சட்டங்களை நீக்கக் கோரிய விவசாயிகளின் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும், விளைப்பொருட்களுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்கவும் ஒன்றிய அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று(ஜனவரி 2), பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைநகர் சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள சத்ய பால் மாலிக், “விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதென ஒன்றிய அரசு எண்ண வேண்டாம். தற்காலிகமாகதான் நிறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் அநீதி நடந்தால், அப்போராட்டம் மீண்டும் தொடங்கும். விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறவும், விளைப்பொருட்களுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்கவும் ஒன்றிய அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும். இது ஒன்றிய அரசின் பொறுப்பு” என்று கூறியுள்ளார்.
தனது பதவியை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தப்பட்டதற்கு தான் பயப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், “நான் எப்போதும் விவசாயிகளுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, ஒன்றிய பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது அம்மாநிலத்தின் ஆளுநராக சத்யபால் மாலிக் பணியாற்றியுள்ளார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான சத்யபால் மாலிக், ஒன்றிய பாஜக அரசால் கோவா, பீகார், ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும், இப்போது மேகாலயாவிலும் ஆளுநராக பணிபுரிய நியமிக்கப்பட்டவர்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.