Aran Sei

‘ஒரு நாய்க்கு தெரிவிக்கப்படும் இரங்கல், இறந்தபோன 250 விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை’ – மேகாலயா ஆளுநர்

மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவளித்ததுடன் ஆளும் பாஜகவின் தொடர்ச்சியான எரிச்சலூட்டும் கருத்துக்களை மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் விமர்சித்துள்ளார்.

மேலும், டெல்லியின் எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் காரணமாகவே, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் பாஜகவுக்கான ஆதரவு தளர்ந்து வருவதாகவும் அவர் கணித்துள்ளார்.

நேற்று (மார்ச் 17), ஆளுநர் சத்ய பால் மாலிக் என்டிடிவிக்கு அளித்த பிரதியேக நேர்காணலில், “ஒரு நாய் உயிரிழந்தால் கூட அதற்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. 250 விவசாயிகள் இறந்துள்ளனர், ஆனால் அவர்களுக்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. இந்த போராட்டம் இவ்வாறே நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், மேற்கு உபி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் பாஜக தோல்வியடையும்.” என்று கூறியுள்ளார்.

“விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு நல்லபடியாக முடியாது” – மேகாலயா கவர்னர் எச்சரிக்கை

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பேசியதாக கூறியவர், “விவசாயிகளை வெறுங்கைகளுடன் திருப்பி அனுப்பக்கூடாது. அரசு அவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநராக பதவி வகித்துக்கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் கூறும் இதுபோன்ற கருத்துகள் குறித்து கவலைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சத்ய பால் மாலிக், “நான் அவர்களுக்கு தொந்தரவு விளைவிப்பதாக அரசு நினைத்தால் நான் பதவியிலிருந்து விலக்கப்படுவேன். அப்படி நான் ஆளுநராக இல்லாமல் போனாலும் பேசுவேன். விவசாயிகளின் இந்த நிலையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.” என்று என்டிடிவிக்கு அளித்த நேர்காணலில் தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறக்க கோரும் விவசாயிகள் – ஏற்கமறுக்கும் மத்திய அரசு

அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ நீர்த்துப் போக வைத்து ஒன்றிய பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு & காஷ்மீர் மாநிலமாக இருந்த போது அம்மாநிலத்தின் ஆளுநராக சத்யபால் மாலிக் பணியாற்றியுள்ளார். சத்யபால் மாலிக் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி. அவர் மத்திய பாஜக அரசால் கோவா, பீகார், ஒடிசா, ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும், இப்போது மேகாலயாவிலும் ஆளுநராக பணிபுரிய நியமிக்கப்பட்டவர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்