Aran Sei

டிஆர்பி மோசடி – சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு

த்தரப் பிரதேசக் காவல்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகளை (டிஆர்பி) தவறாகக் கையாண்டுள்ளதாக மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்க் காவல் நிலையத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தின் விளம்பரதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை உத்தரப் பிரதேச போலீசார் சிபிஐ யிடம் ஒப்படைத்து உள்ளனர் என்று என்டிடிவி வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

இதன் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிஐ அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் மீது எப்ஐஆர் பதிந்துள்ளது. இதில் முதன்மையான குற்றச்சாட்டு டிஆர்பியைப் பணம் கொடுத்துக் கையாடல் செய்ததாகும். இதற்கு மேல் விவரங்களை வழங்க சிபிஐ அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

டிஆர்பி அல்லது தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகள் என்பது ஒரு சேனல் அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி மக்களிடம் எவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பதைக் கணக்கிடுகிறது. இந்தத் தொலைக்காட்சி புள்ளிகளை இந்தியாவின் ஒளிப்பரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) கணக்கிடுகிறது.

இது இந்தியா முழுவதும் 45,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள பார் ஒ மீட்டர் என்னும் கருவியை வைத்து இதை அளக்கிறது. இந்த வீடுகளில் உள்ள உறுப்பினர்கள் பார்க்கும் நிகழ்ச்சி அல்லது சேனலைப் பற்றிய தரவுகளை இந்தக் கருவிகள் சேகரிக்கும்.

இதன் அடிப்படையில் வாராந்திர மதிப்பீடுகளை வழங்குகிறது இந்தியாவின் ஒளிப்பரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்).

கடந்த அக்டோபர் மாதம் ஒரு போலி டிஆர்பி மோசடிக் கும்பல் தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி எண்களை மோசடி செய்ததாக BARC நிறுவனத்திடம் புகார் அளித்தது ஹன்ஸா ஆராய்ச்சிக் குழுமம். ஹன்ஸா குழுமம் BARC ன் விற்பனையாளர்களில் ஒன்று. இவர்கள் மக்கள் வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் டிஆர்பியைக் கண்காணிக்கும் கருவிகளுடன் தொடர்பு உடையவர்கள்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சி சேனல்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாக முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது.

டிஆர்பி-யில் முறைகேடு – ரிபப்ளிக் டிவி மீது குற்றச்சாட்டு

இந்நிலையில் டிஆர்பி மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரிபப்ளிக் டிவியின் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள் அதன் ஊழியர்கள் இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்று மும்பை மாநகரக் காவல் ஆணையர் பரம்பீர் சிங் கூறினார்.

”மக்களின் வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சிகளில் எப்போதும் ஒரே சேனலே வைக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றனர். கல்வியறிவில்லாத மக்களின் வீடுகளில் கூட ஆங்கில சேனல்கள் தொடர்ந்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது“ என்று கூறினார் சிங். இதனால் தவறான டிஆர்பி பரவுவதாகவும், டிஆர்பி மதிப்பீடுகள் வாங்கப்படுவதாகவும் முக்கியமாக இந்தக் கையாடல்கள் விளம்பர வருவாயைப் பெருக்குவதற்காகவே நடத்தப்பட்டன என்றும் அவர் கூறினார்.

மும்பை போலீசார் டிஆர்பி கையாளுதல் தொடர்பான வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து மதிப்பீடுகளை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக இந்தியாவின் ஒளிப்பரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

`டிஆர்பி பட்டியலை வெளியிடப்போவதில்லை’ – பிஏஆர்சி அறிவிப்பு

இந்நிலையில்தான் சிபிஐ உத்தரப்பிரதேச போலீஸ் பதிவு செய்த வழக்கை எடுத்துக் கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்