ரிபப்ளிக் தொலைக்காட்சி உட்பட மூன்று சேனல்கள் மீது டிஆர்பி-யில் முறைகேடு செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் மேல் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என பிஏஆர்சி (BARC) அறிவித்துள்ளது.
மக்கள் எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிகம் பார்க்கிறார்கள் என்பதன் அளவீடான டிஆர்பி-யில் முறைகேடு செய்ததாக ரிபப்ளிக் தொலைக்காட்சி மீது மும்பை காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.
தொடர்ந்து டிஆர்பி முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ரிபப்ளிக் டிவி நிறுவனம், சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை போலீசை கேள்வி கேட்டதால் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் கூறியிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று தெரிவிக்கும் வகையில் ரிபப்ளிக் டிவி ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டிருந்தது.
#RepublicExposesParamBir | News Release: With the BARC email in public, the fake news-based campaign against Republic Media Network led by Mumbai Police Commissioner comes to an end pic.twitter.com/UEgGuIxeeC
— Republic (@republic) October 18, 2020
அதில், “ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனம் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை, எந்தவித முறைகேட்டிலும் ரிபப்ளிக் டிவி ஈடுபடவில்லை என்று பிஏஆர்சி அனுப்பியுள்ள ஆதாரப்பூர்வ மின்னஞ்சலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் ரிபப்ளிக் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.” எனக் கூறியுள்ளது.
ரிபப்ளிக் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ்க்கு, பிஏஆர்சி அக்டோபர் 17ம் தேதி இந்த மின்னஞ்சலை அனுப்பியதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல் மூலம், மும்பை கமிஷ்னர் பரம் பீர் சிங் மற்றும் ஊடகத்தில் ஒரு பகுதியினர் ரிபப்ளிக் டிவிக்கு எதிராக கூறியவை அனைத்தும் பொய் என்பது உறுதியாகியுள்ளதால் அவர்கள் ரிபப்ளிக் டிவி நிறுவனத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“பிஏஆர்சி-யின் மின்னஞ்சல் பொதுவில் வெளியிடப்படுவதன் மூலம், மும்பை கமிஷ்னர் தலைமையில் ரிபப்ளிக் டிவிக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் பொய் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. ரிபப்ளிக் டிவி மீது பொய் பரப்புரை செய்துவந்த பரம் பீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் குறித்த ரிபப்ளிக் டிவியின் செய்தி அறிக்கைக்கு பிஏஆர்சி மறுப்புக் கூறியதோடு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
— BARCIndia (@BARCIndia) October 18, 2020
“நடைபெற்று வரும் விசாரணை குறித்து பிஏஆர்சி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் விசாரணை தொடர்பாக சட்ட அமலாக்க நிறுவனத்துக்கு தேவைப்படும் உதவியை பிஏஆர்சி வழங்கி வருகிறது.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகவல்களை பொதுவில் பகிர்ந்திருப்பது, தகவல்களைத் திருத்தி மாற்றியிருப்பது உள்ளிட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செயல்கள் பிஏஆர்சி-க்கு மிகுந்த அதிருப்தி அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்திய பிஏஆர்சி, இந்த விசாரணை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தி தெரிவிக்கிறது. ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செயல்கள் குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது.” என பிஏஆர்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மீதும் டிஆர்பி மதிப்பீட்டில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தன.
இந்த இரண்டு தொலைக்கட்சிகளின் நிறுவனர்களும் மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்ததாக ஸ்க்ரோல் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.