Aran Sei

டிஆர்பி-யில் முறைகேடு – ரிபப்ளிக் டிவி மீது குற்றச்சாட்டு

Credits: Op India

ரிபப்ளிக் தொலைக்காட்சி உட்பட மூன்று சேனல்கள் மீது டிஆர்பி- யில் முறைகேடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, அர்னாப் கோசாமி நிர்வகிக்கும் ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் டிஆர்பி-யில் முறைகேடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

ஹன்ஸா என்ற அமைப்பு இந்த முறைகேட்டில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உதவி இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி அதிகமாக பார்க்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு டிஆர்பி என்ற அளவீடு  உதவுகிறது. இதனை கண்காணிக்க மும்பை நகரம் முழுக்க 2000 பாரோமீட்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், தொலைக்காட்சியில் அவர்களுடைய சேனல் மட்டுமே வைக்க வேண்டும் என சில வீடுகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் ஆணையர் கூறியுள்ளார்.

”முறைகேடாக டிஆர்பியை பெற்றதன் மூலம் விளம்பரங்களில் இருந்து வருமானம் ஈட்டியுள்ளார்கள். இது மோசடியாக கருதப்படும். எத்தனை உயர் பதவியில் இருந்தாலும் கூட, சேனலுடன் சம்மந்தப்பட்ட அனைவரும் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்கள். தேவைப்பட்டால் விசாரணையும் நடத்தப்படும்” என ஆணையர் கூறினார்.

இது தொடர்பாக ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா நிறுவன உரிமையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தில்  420 (மோசடி மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்து விநியோகிப்பது), 409 (நம்பிக்கை மீறல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

டி ஆர் பி முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரிபப்ளிக் டிவி நிறுவனம், சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை போலீசை கேள்வி கேட்டதால் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக கூறியுள்ளது.

”ரிபப்ளிக் டிவி மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான எங்களுடைய உறுதியை இன்னும் வலுப்படுத்தி உள்ளது.” என்றும் ரிபப்ளிக் டிவி தெரிவித்துள்ளது.

மூன்று நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மீது முறைகேட்டின் மூலம் வருமானம் வந்துள்ளதா என்ற ரீதியில் விசாரணை நிகழ்த்தப்பட உள்ளதாக மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

ரிபப்ளிக் டிவி அதிகாரிகள் இன்றும் நாளையும் விசாரிக்கப்படுவார்கள் என்றும், தொடர்ந்து வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும் விசாரிக்கப்படலாம் எனவும் ஆணையர் பரம் பீர் சிங் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்