Aran Sei

ரிபப்ளிக் டிவி, அர்னாப் கோஸ்வாமி மீது டிஆர்பி மோசடி வழக்கு – ” விசாரணை 12 வாரங்களில் முடிவடையும் “

image credit : indianexpress.com

தொலைக்காட்சி தரவரிசை எண் (டிஆர்பி) மோசடி வழக்கில், அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வேண்டுமானால் அவருக்குக் குறைந்தது 3 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம், மும்பை போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிஆர்பி முறைகேடு வழக்கு – பார்க் அதிகாரிக்கு அர்னாப் கோசாமி பணம் கொடுத்தது அம்பலம்

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து விடுவதாக மும்பை போலீஸ் கூறியிருக்கிறது.

ரிபப்ளிக் தொலைக்காட்சியையும் பிற ஊடகங்களையும் நடத்தும் ஏஆர்ஜி அவுட்லையர் மீடியா, போலீஸ் விசாரணை, முதல் தகவல் அறிக்கை, நீதிமன்ற நடைமுறைகள், குற்றப் பத்திரிகைகள் இவற்றை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் மீது உயர்நீதிமன்ற அமர்வு விசாரணை நடத்தியுள்ளது. இந்த வழக்கை மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) அல்லது வேறு ஏதாவது சுயேச்சையான முகமைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

ஏஆர்ஜி மீடியா சார்பில் வாதாடிய அசோக் முந்தார்கி, “பிற தொலைக்காட்சிகளும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் போலீஸ் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஊழியர்களையும் அதன் பங்கையும் மட்டும்தான் விசாரித்து வருகிறது. நான்கு மாதங்களாக விசாரித்தும் அர்னாப் கோஸ்வாமி அல்லது ரிபப்ளிக் தொலைக்காட்சி மீது குற்றம் சாட்ட எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” என்று வாதிட்டுள்ளார்.

டிஆர்பி முறைகேடு வழக்கு: ஆதாரம் இருந்தால் அர்னாப்பை குற்றவாளியாக இணைக்காதது ஏன்? – மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி

சிறப்பு அரசு வழக்கறிஞர் தீபக் தாக்கரே, போலீஸ் விசாரணை 12 வாரங்களுக்குள் முடிவடையும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். யார் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற தெளிவு இல்லாத நிலையில் இப்போது விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி எஸ் எஸ் ஷிண்டே, நீதிபதி மனீஸ் பதாலே அடங்கிய அமர்வு கூறியுள்ளது.

விசாரணையை ஜூன் 28-க்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அர்னாப் கோஸ்வாமி அதுவரை போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்