Aran Sei

`டிஆர்பி பட்டியலை வெளியிடப்போவதில்லை’ – பிஏஆர்சி அறிவிப்பு

Credits Telugu Bulletin

டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து செய்திச் சேனலுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் செய்திச் சேனலுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவது 12 வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக நேயர்களுக்கான ஒளிபரப்பு ஆய்வுக் குழு (பிஏஆர்சி) அறிக்கை வெளியிட்டுள்ளது.

”புள்ளிவிவரங்களை மதிப்பிடவும் தரத்தை உயர்த்தவும் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. ஆய்வுகளுக்கு 8 முதல் 12 வாரங்கள் தேவைப்படும் என்பதால், அனைத்து மொழிகளிலும் செய்திச் சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வாரந்தோறும் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து பிஏஆர்சி வாரியத்தின் தலைவர் புனித் கோயென்கா, “சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, ஏற்கனவே கடுமையாக உள்ள நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கும் துறையில் ஆரோக்கியமான போட்டிச் சூழல் மீது கவனம் செலுத்தவும் இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் அவசியப்படுகிறது.” என விளக்கம் அளித்துள்ளார்.

Credits Twitter

தொலைக்காட்சி சேனல்கள் பார்வையாளர்களை அணுகி டிஆர்பி முறைகேட்டில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பையில் இயங்கிவரக்கூடிய ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சி, பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்துள்ள மும்பைக் காவல்துறை இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணைக்காக ரிபப்ளிக் தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கு மும்பைக் காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. நேரில் ஆஜராக முடியாது என்று ரிபப்ளிக் நிறுவனம் சம்மனை ரத்து செய்ய வேண்டுமென உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று மறுத்துள்ளது. ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளதைக் குறிப்பிட்டு, நிறுவனம் மும்பை உயர்நீதி மன்றத்தையே அணுக வேண்டும் என உச்சநீதி மன்றம் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்