Aran Sei

பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டுவதுதான் கோழைகளின் ஆயுதம்: எம்.பி கனிமொழி

Credits The News Minute

இலங்கை கிரிக்கெட் வீரர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து எழுந்த சர்ச்சையில் அவருடைய மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து கடந்த சில நாட்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. நேற்று நடிகர் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுடைய புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த ரித்திக் ராஜ் என்பவர், பள்ளி செல்லும் வயதேயான அந்தச் சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுத்துள்ளார். இந்த நபர் குறித்து சைபர் க்ரைமில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் சேரன் இதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழக முதல்வர் பழனிசாமியைக் குறிப்பிட்டு, “நெஞ்சை பிளக்கும்படியான எண்ணத்தை ஊடகத்தில் பதிவுசெய்த அந்த மிருகத்தைக் கண்டுபிடிப்பதோடு அல்ல.. மன்னிப்பே இல்லா தண்டனை கொடுங்கள்.” என வலியுறுத்தியுள்ளார்.

 

“உடனடி நடவடிக்கை தேவை அய்யா.. சைபர் க்ரைம் காவல்துறை நண்பர்கள் அவசியம் உதவவேண்டும். பெண்களையும் பெண்குழந்தைகளையும் பாதுகாப்போம்.” எனவும் சேரன் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில், “விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட.” எனக் கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.

 

“பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதைச் செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

பின்னணிப் பாடகி சின்மயி, “கருத்து வேறுபாட்டைத் தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு support a நிக்கிறாங்க இந்த ஊர்ல.” என ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

“அரசியல் அதிகாரத்தில் உள்ள மக்கள் எதையும் மாற்றப் போவதில்லையா? ஒரு மனிதன், ஒரு குழந்தையைப் பொது வெளியில் பாலியல் வல்லுறவு மிரட்டல் விடுக்கின்றான். அவன் ஒரு குற்றவாளி.”எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட் வீரர் தோனியின் ஆட்டத்தைப் பற்றிய விமர்சனத்தின்போது, அவருடைய மகளுக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இந்தித் திரைப்பட இயக்குநர் அனுராக் கஷ்யப் பாஜக-வை விமர்சித்தபோது அவருடைய மகளுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. சில நாட்களுக்கு அவர் ட்விட்டரிலிருந்து வெளியேறியிருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்