Aran Sei

திரிபுராவில் தாக்கப்படும் பத்திரிகையாளர்கள் – தொடரும் போராட்டங்கள்

Image Credits: The Wire

கறுப்பு முகக்கவசங்கள் அணிந்து, திரிபுராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் முதலமைச்சர் பிப்லாப் குமார் டேப்பின் அச்சுறுத்தலுக்கும் எழுத்தாளர்கள் மீதான “தாக்குதல்களுக்கும்” ​​எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊடகவியலாளர்கள் பேரவை (ஏஓஜே) எனும் பெயரில் ரவீந்திர பவன் முன் கூடிய உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

“அவர் (பிப்லாப் குமார் டேப்) தனது கருத்தை வாபஸ் பெறும் வரை நாங்கள் எங்கள் இயக்கத்தைத் தொடருவோம். இதனை ஒரு முதலமைச்சர் கூறுவது சரியல்ல” என்று ஏஓஜேவின் ஒருங்கிணைப்பாளர் சேகர் தத்தா கூறியுள்ளார்.

2020, செப்டம்பர் 11 அன்று தெற்கு திரிபுரா மாவட்டத்தில் சப்ரூமில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு அடிக்கல் நாட்டிய பிப்லாப், சில செய்தித்தாள்கள் கொரோனா நிலைமை குறித்து மாநில மக்களை குழப்ப முயற்சிக்கின்றன என்றும் அதனால் இவர்களை “மன்னிக்க மாட்டேன்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

“சில செய்தித்தாள்கள் மக்களை குழப்ப முயற்சிக்கின்றன… வரலாறு அவர்களை மன்னிக்காது, திரிபுரா மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். நான் அவர்களை மன்னிக்க மாட்டேன். நான் என்ன சொல்கிறேனோ அதையே செய்வேன், வரலாறு அதற்கு சான்றாகும்,” என்று பிப்லாப் அப்போது கூறினார்.

முதல்வர் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிய ஊடகவியலாளர்களால் இது அவர்களை அச்சுறுத்துவதற்காகக் கூறப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். பிப்லாப் தனது கருத்தைப் திரும்பபெறவில்லை என்றும், ஆனால் அவர் தனது உரையில் யாரையும் அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

போராட்டத்தின் போது, ​​ஏஓஜே தலைவர் சுபல்குமார் டே, மூத்த எழுத்தாளர்களின் இரண்டு குழுக்கள் சமீபத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், அவர்கள் மாவட்டங்களில் பத்திரிகையாளர்களின் தொழில் உரிமை மீறப்படுவதைக் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளார்.

“மாவட்டங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் கடுமையான அழுத்தத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தகவல்களை பகிரங்கமாக வெளியிடத் தடை (GAG -ஜிஏஜி) உத்தரவின் காரணமாக எந்த அரசாங்க அதிகாரியும் அவர்களுடன் (ஊடகவியலாளர்கள்) பேச விரும்பவில்லை. செய்தி அறிக்கைகள் எவ்வாறு வெளியிடப்பட வேண்டும் என்று மாஃபியாக்கள் ஆணையிடுகிறார்கள்,” என்று சுபல்குமார் தெரிவித்துள்ளார்.

2020, செப்டம்பர் 11, முதல்வர் இவ்வாறு தெரிவித்த பின் ஆறு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், புகார்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்தியப் பத்திரிகை கவுன்சிலுக்கு ஏஓஜே எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.கே.பைஸைச் சந்தித்த ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர அவரது உதவியைக் கோரினர். காந்தி ஜெயந்தி அன்று கறுப்பு பேட்ஜ்கள் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

2018 மார்ச் மாதம் பாஜக-ஐபிஎஃப்டி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலத்தில் 25 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர் என்று சுபல்குமார் டே குற்றம் சாட்டியதாக இச்செய்தி குறிப்பிடுகிறது.

அவர்களின் போராட்டத்திற்கு எடிட்டர்ஸ் கில்ட், ஐரோப்பிய பத்திரிகையாளர் சங்கம், பங்களாதேஷ் சங்க்பாடிக் சங்கா, முக்தோ பிரகாஷ், டாக்கா மற்றும் இந்தியச் செய்தித்தாள் சங்கம் போன்ற முக்கியப் பத்திரிகையாளர்கள் அமைப்புகளிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்