Aran Sei

“பொறுத்துக் கொள்ள முடியாது” – அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதி மன்றம் கண்டனம்

Image credit - hindustantimes.com

“நம் நாட்டில் பொது விவாதங்கள் எப்போதுமே இவ்வளவு மோசமாக இருந்ததில்லை” என்று உச்ச நீதிமன்றம் ரிபப்லிக் தொலைகாட்சியின் ஆசியர் அர்னாப் கோஸ்வாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக மும்பை போலீஸ் பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கைகளை மும்பை உயர்நீதி மன்றம் தடை செய்திருந்தது. அதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தின் விபரங்களையும் தாக்கல் செய்யும்படி மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார். அது வரை அர்னாப் மீதான எஃப்ஐஆர்கள் மீது மும்பை உயர்நீதி மன்றம் விதித்த தடை தொடரும்.

அர்னாப், செய்தி வெளியிடுவதில் மேலும் பொறுப்புடன் நடந்து கொள்வது தொடர்பாக உத்தரவாதம் அளிக்கும்படி உச்சநீதி மன்றம் அவரிடம் கூறியிருக்கிறது. அதை அவர் எவ்வாறு செய்யப்போகிறார் என்பதை விளக்கும் வகையில் ஒரு உறுதி மொழிப் பத்திரத்தையும் அவர் தாக்கல் செய்ய வேண்டும். கூடவே, ரிபப்ளிக் டிவிக்கு எதிரான வழக்கு விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

பால்கர் கொலை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அர்னாப் கோஸ்வாமி கூறிய அவதூறான கருத்துக்கள் மீதும், ஏப்ரல் மாதம் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் இடம் பெயர் தொழிலாளர்கள் கூடியிருந்ததை அவமதிக்கும் விதம் கூறிய கருத்துக்கள் மீதும் அர்னாப் கோஸ்வாமி மீது மும்பை போலீஸ் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்திருந்தது. இந்த எஃப்ஐஆர்களுக்கு மும்பை உயர்நீதி மன்றம் ஜூன் 30-ம் தேதி தடை விதித்திருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம், குழந்தைகள் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ரிபப்ளிக் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில்,

“இரண்டு சாதுக்கள் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 80% சனாதன தர்மத்தை பின்பற்றும் இந்துக்கள் வாழும் நாட்டில், இந்துவாக இருப்பதே ஒரு குற்றமாகியிருக்கிறது. என்னுடைய நாட்டில் இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இது என்னுடைய நாடு. “ஒரு மவுல்வி அல்லது பாதிரி கொலை செய்யப்பட்டால் இப்படி அமைதி நிலவுமா” என்று சீறினார் என்று நியூஸ் லாண்ட்ரி செய்தித் தளம் தெரிவிக்கிறது.

தொடர்ந்து மகாராஷ்டிராவின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவர் குறி வைத்தார். “சோனியா-சேனா அரசு இதை நான்கு நாட்களாக ஏன் தேசத்திடமிருந்து மறைத்தார்கள்” என்று பதில் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தொடர்ந்து, சோனியா காந்தி சாதுக்களை கொல்வதற்கு ஏற்பாடு செய்தார் என்றும், தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்து சாதுக்களை எப்படி ஒழித்துக் கட்டினேன் என்று தகவலை இத்தாலிக்கு அனுப்புகிறார் என்றும், இத்தாலியில் உள்ளவர்கள் சோனியா காந்தியை பாராட்டுகிறார்கள் என்றும் வெறுப்பை கக்கியதாக நியூஸ் லாண்டரி தெரிவிக்கிறது.

இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கொரோனா முழு அடைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து தமது ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூடிய தொழிலாளர்கள் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் என்று அர்னாப் அவதூறு செய்திருந்தார் என்று நியூஸ் லாண்டரி செய்தி தெரிவிக்கிறது.

இந்த எஃப்ஐஆர்கள் மீதான தடையை எதிர்த்த மேல் முறையீட்டில், அர்னாப் கோஸ்வாமி சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தனது கட்சிக்காரர் வேண்டுமென்றே குறி வைக்கப்படுகிறார் என்று கூறினார். தடை செய்யப்பட்ட எஃப்ஐஆர்கள் பொய்யானவை என்று அவர் குற்றம் சாட்டினார்.

“சமூகத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்துக்கு முக்கியமானது. விசாரிக்கப்படுவதிலிருந்து யாரும் விலக்கு பெற முடியாது. விசாரணை கௌரவமாகவும், தனிமையிலும் நடப்பதை நாங்கள் உறுதி செய்ய முடியும். ஆனால் நீங்கள் (அர்னாப்) இன்னும் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார் என்று thequint.com செய்தி தெரிவிக்கிறது.

ஒவ்வொரு நாளும் ரிபப்ளிக் டிவி தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்துக்கு வருகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

“வெளிப்படையாகச் சொன்னால் என்னால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.” என்று அவர் கூறினார்.

தொலைக்காட்சியின் மரியாதை டிஆர்பியை விட முக்கியமானது – ராஜ்தீப் சர்தேசாய்

டிஆர்பி மோசடியிலும் அர்னாப் கோஸ்வாமி மீதும் ரிபப்ளிக் டிவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பி-யில் முறைகேடு – ரிபப்ளிக் டிவி மீது குற்றச்சாட்டு

டிஆர்பி வழக்கில் ரிபப்ளிக் டிவியைக் காப்பாற்ற முயல்கிறதா யோகி ஆதித்யநாத் அரசாங்கம்?

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்