Aran Sei

’முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்புவதா?’- உச்சநீதி மன்றம் கேள்வி

ருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தின் மீதும் வெறுப்பை பரப்பும் நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப முடியுமா என்று சுதர்ஷன் தொலைக்காட்சியின்  ’பிந்தாஸ் போல் – யூபிஎஸ்சி ஜிகாத்’ நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபத்தில் சுதர்ஷன் தொலைக்காட்சி பிந்தாஸ் போல் என்ற நிகழ்ச்சிக்கான முன்னோட்டத்தை வெளியிட்டது. அதில் முஸ்லீம் மக்கள் மீது பொய்யான புகார்களை சித்தரித்து, அவர்கள் மேல் வெறுப்பை உருவாக்கும் விதமாக இருப்பதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் உட்பட பலரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் வந்தன.

இது தொடர்பாக ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் முஸ்லீம் மக்களை அவமானப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நன்றி : thewire.in

கடந்த 15-ம் தேதி மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  சுதர்ஷன் தொலைக்காட்சியின் பிந்தோஸ் போல் நிகழ்ச்சியை மறு உத்தரவு வரும் வரை ஒளிபரப்பக்கூடாது என்று தடைவிதித்தனர்.

இதை தொடர்ந்து 17-ம் தேதி,  சுதர்ஸன் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவ்ஹன்கேவின் சார்பில் அவரின் வழக்கறிஞர் திவான்  மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “இந்த நிகழ்ச்சிக்கு யுபிஎஸ்சி ஜிகாத் என்று பெயரிட்டதற்குக் காரணம், ஜகாத் என்ற அறக்கட்டளை சில தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடைய அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி பெற்று வருகிறது என்ற அடிப்படையில்தான் இப்பெயர் வைக்கப்பட்டது. மேலும் எந்த சமூகத்தை சேர்ந்த தனிநபரும் சிவில் சர்வீஸ் பணியில் தகுதியின் அடிப்படையில் சேர்வதில் எங்கள் தொலைக்காட்சிக்கு எவ்விதமான வருத்தமும் இல்லை.” என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் அதில், “எங்களின் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பி முடிக்க வேண்டும் என விரும்புகிறோம். வேறு எங்கும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியாது. இதுவரை 4 கட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அன்றே இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகளான டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கே.எம்.ஜோஸப் ஆகியோர் காணொலியில் விசாரித்தனர். சுதர்ஸன் தொலைக்காட்சி சார்பில் வழக்கறிஞர் ஷியாம் தவன் ஆஜரானார்.

நன்றி : The Hindu

விசாரணையின் முடிவில் நிதிபதிகள், சுதர்ஷன் தொலைக்காட்சிக்கு கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

  1. நீங்கள் ஒரு செய்தியை புலனாய்வு செய்து புதிதாக வெளியிடலாம். ஆனால் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உருவாக்கும் பொய்யான ஒரு பிம்பத்தை உருவாக்க கூடாது.
  2. சிவில் சர்வீஸ் தேர்வில் அந்தக் குறிப்பிட்ட மதத்தினர் சேருவதை காட்டும் போதெல்லாம் நீங்கள் ’ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாத அமைப்பில் சேருவதைப் போல் சித்தரித்து காட்டியிருக்கிறீர்கள். அப்படியென்றால், சதித் திட்டத்துடன்தான் முஸ்லிம்கள் சிவில் சர்வீஸ் பணியில் சேர்கிறார்கள் என்று கூற வருகிறார்களா?
  3. மேலும் நிகழ்ச்சியில் பச்சை நிற டி-ஷர்ட், தலையில் குல்லா வைத்திருப்பது போன்றவை ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதை வேதனைப்படுத்தும் விதமாக உள்ளது.
  4. முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபர் மீதும் நீங்கள் பொய்யான முத்திரையை குத்த முயல்கிறீர்கள்.
  5. இந்தச் செயல் உங்கள் வெறுப்புணர்வையே காட்டுகிறது. இது கவலைக்குரிய விஷயம். இங்கு பேச்சு சுதந்திரம் என்பது வெறுப்புணர்வாக மாறிவிட்டது.
  6. தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து பணம் பெற்று சிவில் சர்வீஸ் பயிற்சி தரப்படுகிறதா என்று நீங்கள் புலனாய்வு செய்து செய்தி வெளியிடுவதில் நீதிமன்றத்துக்கு எந்தச் பிரச்சனையும் இல்லை.
  7. ஆனால் யு.பி.எஸ்.சி பணிக்கு முஸ்லிம்கள் குறிப்பிட்ட சதித் திட்டத்துடன்தான் சேர்கிறார்கள் என்று அடையாளப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
  8. ஜனநாயகத்துடனும் பன்முகத்தன்மையுடனும் இயங்கும் நம் நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
  9. நாங்கள் தணிக்கைத் துறை இல்லை. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் உள்ள வெறுப்புணர்வை தூண்டும் காட்சிகளை நீக்கப்பட வேண்டும்.

வரும் புதன் கிழமை (செப்டம்பர் 23) அன்று உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை குறித்த விசாரனையை தொடர்விருப்பதாக தெரிவித்திருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்