Aran Sei

சித்திக் காப்பன் – உச்ச நீதிமன்றத்தில் அவசர பிணை மனு

Image Credits: India Legal

லையாள ஊடகவியலாளர் சித்திக் காப்பனின் பிணை மனுவை அவசரமாக விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (கேயுடபிள்யூஜே) உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது.

சித்திக் தனது குடும்ப உறுப்பினர்களுடனும் வழக்கறிஞருடனும் தொடர்ந்து உரையாடுவதற்கு வீடியோ அழைப்புகளை (video calls) அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளது. “நாங்கள் கடந்த வாரம் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தோம். அது இன்று விசாரணைக்கு வரவுள்ளது” என்று கேயுடபிள்யூஜேவின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸ் ‘தி வயர்’ இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.

“மனுதாரருக்கு இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. வக்காலத்தில் கையெழுத்து வாங்குவதற்காகக் கூடக் குற்றம் சாட்டப்பட்ட சித்திக் காப்பனைச் சந்திக்க முடியவில்லை. 05.10.2020 அன்று சித்திக் கைது செய்யப்பட்ட பின்னர் அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, 15 நாட்கள் மருத்துவமனையில் போராடி செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

அக்டோபர் 5 அன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் செல்லும் வழியில் டெல்லியைச் சேர்ந்த மலையாளப் பத்திரிகையாளர் சித்திக் காப்பன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஹத்ராஸ் சம்பவம் குறித்துச் செய்தி திரட்டுவதற்காக சித்திக் காப்பன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் மீது குற்றவியல் சட்டப்பிரிவுகள் 153-A, 295-A, 124-A, சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச்சட்டத்தின் 17, 14 பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 65, 72, 76 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகச் சதி தீட்டியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

பத்திரிகையாளர் மீது தேச விரோத வழக்கு – உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை

சித்திக்கின் கைது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. கேயுடபிள்யூஜே சங்கத்தினர், சித்திக் காப்பனைச் சந்திக்க வேண்டி அளித்திருந்த மனுவை, மதுரா நீதிமன்றத் தலைமை நீதிபதி அஞ்சு ராஜ்புட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

“குற்றம் சாட்டப்பட்டவரைச் சந்திப்பதற்கான விண்ணப்பத்தை நிராகரிக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை” என்றும் “அந்த உத்தரவு தடுப்புக்காவலின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது மற்றும் சட்டத்துக்கு எதிரானது” என்றும் சங்கத்தின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பத்திரிகையாளரைச் சந்திக்க வழக்கறிஞருக்கு மறுப்பு: ஹத்ராஸ் உரிமை மீறல்

முன்னதாக, எதற்காகக் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியாத சித்திக்கின் 90 வயது தாய், மனைவி மற்றும் குழந்தைகள் அவரிடம் போனில் பேச வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் பேசுவதற்குச் சித்திக்குக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

“மதுராவின் புதிய தற்காலிகச் சிறைச்சாலையில், கொரோனா தொற்றிலிருந்து கைதிகளைக் காப்பாற்ற எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதைக் குறிக்கிறது” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சித்திக் காப்பனின் குடும்பத்தினர் அவரை முற்றிலும் சார்ந்து இருக்கிறார்கள். அவர் ஒருவரின் வருவாயை நம்பியே குடும்பம் இயங்குகிறது. சித்திக்கின் தாயாருக்கு உடல்நிலை குறைவு உள்ளது. சித்திக் கைதான வருத்தத்தால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் – ‘உடனே தள்ளுபடி செய்க’

“சித்திக் கடுமையான நீரிழிவு நோயால் அவதிப்படுகிறார். அவருக்குச் சரியான நேரத்தில் மருந்துகள் மற்றும் உணவு வழங்க வேண்டும். சரியான உடற்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என்றும் கேயுடபிள்யூஜே கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்