Aran Sei

‘ஊபா சட்டத்தில் கைதான என் கணவருக்காக சுண்டு விரலையாவது அசைத்தீர்களா கேரள முதல்வரே?’ : சித்திக் கப்பனின் மனைவி கேள்வி

“உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில்  ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட என் கணவருக்காக நீங்கள் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை, தயவுசெய்து இதற்கான காரணத்தை கூற முடியுமா” என்றும் ஊபா வழக்கில் கைது செய்யப்பட்ட சித்திக் கப்பனின் மனைவி, கேரள முதல்வர் பினரயி விஜயனை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்த சித்திக் கப்பன், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்முறை  சம்பவத்தைப் பற்றி தகவல் சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், ”பொது அமைதிக்கு குந்தகம்” விளைவிப்பதாகக் கூறி அவரைக் கைது செய்தனர்.

சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை

அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் வந்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மதுரா காவல்துறை, அவர்மீது தேசதுரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (UAPA) வழக்குகளைப் பதிவு செய்தது.

`சித்திக் கப்பன் உளவியல் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’ – கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்

இந்த வாரம், பஜ்ரங் தள தொண்டர்களால் கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ரயிலில் பயணம் செய்த கன்னியாஸ்திரிகளை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. அவர்கள் பஜ்ரங் தள தொண்டர்களாலும் ஜான்சி காவல்துரையாலும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இவர்களின் இந்த செயற்பாடானது நமது நாட்டின் மத சகிப்புத்தன்மையின் பாரம்பரியத்தை கெடுத்துவிட்டன. இந்திய அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தனிநபரின் சுதந்திரம் மீது நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த சம்பவத்தை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும் அக்கடித்தில் கோரப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்டாயமதமாற்றம் எனக்கூறி பஜ்ரங்தளம் போராட்டம் – ரயில்பயணத்தில் பாதிவழியில் இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள்

முதல்வரின் இப்பதிவிற்கு,  அதில் கருத்து தெரிவித்துள்ள சித்திக் கப்பனின் மனைவி ரைஹானா சித்திக், “மாண்புமிகு முதல்வரே, நான் ரைஹானா சித்தீக். சுயாதீன பத்திரிகையாளரும் கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் செயலாளருமான சித்தீக் கப்பனின் மனைவி. உத்தரபிரதேசத்தில் சங் பரிவார் தொண்டர்களால், கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு முதல்வராக கண்டித்துள்ளீர்கள். ஆனால், அதே உத்தரபிரதேசத்தில் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட என் கணவருக்காக நீங்கள் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை. தயவுசெய்து இதற்கான காரணத்தை கூற முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்