Aran Sei

’ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு தடை’ – உயர் நீதிமன்றம்

பாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களுக்கும் இந்தத் தடைப் பொருந்தும்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவ ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினைகள் தொடர்பான மருந்துகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் மிகவும் ஆபாசமாக உள்ளது. இது வளர் இளம் பருவத்தினரைத் தூண்டும் விதமாகவும் அமைகின்றது.” என்று கூறியுள்ளார்.

”விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எவ்வித தணிக்கையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதோடு வளர் இளம் பருவத்தினர் குற்றவாளிகளாக உருவாகும் சூழல் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள் மட்டுமின்றி உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் போன்றவற்றுக்கும் தேவையற்ற வகையில் பெண்களை ஆபாசமாகக் காண்பித்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே விளம்பரங்களைத் தணிக்கைக்கு உட்படுத்தவும், மீறும் ஊடகங்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை அது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 12) இந்த வழக்கை  நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு விசாரித்துள்ளது. அப்போது, ஆபாசத்தைப் பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தத் தடையானது, சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்