டிஆர்பியில் நடந்த ஊழலுடன் தொடர்புப்படுத்தி தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டி மும்பைக் காவல் ஆணையர் பரம் பிர் சிங் மீது ரூ.200 கோடிக்கு மானநஷ்ட வழக்கு தொடுக்கவிருப்பதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சிறப்பு நிர்வாக நீதிபதி மற்றும் உதவி காவல் ஆணையர் சுதிர் ஜம்புவடேகர் ஆகியோருக்கு எதிராகவும் அவமதிப்பு மனு தாக்கல் செய்யவிருப்பதாக ரிபப்ளிக் செய்தித் தொலைக்காட்சி கூறியுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள எஃப்ஐஆர் -ன் அடிப்படையில் அவர் வழக்கு நடவடிக்கைகளைத் தொடங்கினார் எனும் உண்மையின் அடிப்படையில், நீதிபதி மீது வழக்கு தொடரப் போவதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பைக் காவல்துறை தாக்கல் செய்த எஃப்ஐஆரில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி இதுவரை ஒரு குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அவர் மீது குற்றம் சாட்ட வேண்டுமானால் அவரை முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு ரிபப்ளிக் டிவியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று ‘ஸ்க்ரோல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
News Release: Arnab & Republic to sue Param Bir Singh for Rs. 200 cr, as Maharashtra Govt and Mumbai Police admit in court that Network is not named in the TRP case FIR. pic.twitter.com/iNSoasmyaa
— Republic (@republic) October 19, 2020
நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து தனக்குக் கிடைத்த வெற்றி என்று ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. “மும்பை உயர்நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு இன்று தாக்கல் செய்துள்ள மனு ரிபப்ளிக் தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். இது எங்கள் நிறுவனம் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது,” என்று அதன் அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும்,” டிஆர்பி முறைகேடு விவகாரத்தில் எங்கள் தலைமை ஆசிரியர்களுக்குச் சம்மன் அனுப்பியிருப்பது பரம் பிர் சிங் அவர்களை பழிவாங்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று எங்கள் நிறுவனம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரான ஒரு உள்நோக்கம் காவல்துறைக்கு இருக்கிறது” என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
டிஆர்பி முறைகேடு
சில ஊடகங்கள் டிஆர்பி எண்களில் முறைகேடு செய்ததாக, அக்டோபர் மாதத்தில், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பிஏஆர்சி) தனது விற்பனை நிறுவனமான ஹன்சா ஆராய்ச்சிக் குழு மூலம் புகார் அளித்தது. இதன் மூலம் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் போலியாக டிஆர்பி எண்களை அதிகரிக்கச் செய்து மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ஹன்சா ஆராய்ச்சிக் குழு பார்வையாளர்களின் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருக்கும் பிஏஆர்சியின் விற்பனையாளர்களில் ஒன்றாகும். ஆரம்பத்தில், மும்பையில் இயங்கிவரும் ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சி, பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, செய்திச் சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவதை 12 வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக பிஏஆர்சி கூறியது.
அக்டோபர் 14-ம் தேதி, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் நிரஞ்சன் நாராயணசாமி மற்றும் மூத்த நிர்வாக ஆசிரியர் அபிஷேக் கபூர் ஆகியோர் தமது வாக்குமூலங்களைப் பதிவு செய்ய மும்பைக் காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு முன் ஆஜரானார்கள்.
மும்பைக் குற்றப்பிரிவு அக்டோபர் 12-ம் தேதி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வினய் திரிபாதி என்ற முன்னாள் ஹன்சா ஆராய்ச்சி ஊழியரைக் கைது செய்ததாகக் கூறியது. இந்த மோசடியில் அவர் முக்கியப் பங்கு வகித்ததாகவும், டிஆர்பி மதிப்பீடுகளை மாற்ற இன்னொரு குற்றவாளிக்குப் பணம் கொடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹன்சா ரிசர்ச்சின் இரண்டு மூத்த அதிகாரிகளின் வாக்குமூலங்களைக் காவல்துறை பதிவு செய்தது.
பாக்ஸ் சினிமா மற்றும் மராத்தி சேனலின் உரிமையாளர்களான ஃபக் மராத்தி, ஷிரிஷ் ஷெட்டி மற்றும் நாராயண் சர்மா ஆகியோரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தனி அக்டோபர் 11-ம் தேதி மும்பைக் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார். ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை நிதி அதிகாரி சிவா சுப்பிரமணியம் சுந்தருக்கு அதற்கு முந்தைய நாள் காவல்துறை முன் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது, ஆனால் அவர் “தனிப்பட்ட வேலைகளை” மேற்கோள் காட்டி தேதியை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டார்.
டிஆர்பி அளவீடுகள் தற்போதைய தொழில்நுட்பங்களுடன் ஒத்துப்போகவில்லை என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமும் தகவல் தொழில்நுட்பம் குறித்த பாராளுமன்றக் குழுவும் குறிப்பிட்டுள்ளன. ஆங்கிலச் செய்தி ஊடகங்களின் பார்வையாளர்கள் வெளி சிறியதாக இருக்கும் காரணத்தால், அவற்றுக்கான டிஆர்பி எண்கள் முறைகேடு செய்யப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளன என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
“தவறான நோக்கத்துடன்” மும்பைக் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டி தனது பெயர் இடப்படாத எஃப்ஐஆரை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் அர்னாப் மனு அளித்திருந்தார். அர்னாப்பைப் பிரதிநிதித்துவ படுத்திய சால்வே “நாளை அவர்கள் அவரை அழைத்துக் கைது செய்யலாம், எங்களுக்குத் தெரியாது,” என்று வாதிட்டுக் கட்டாய நடவடிக்கைகளுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவைக் கோரினார்.
மகாராஷ்டிரா அரசு மற்றும் மும்பைக் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிபில் “நான் இதை வன்மையாக எதிர்க்கிறேன்” என்று கூறினார். இதற்கு நீதிமன்ற அனுமதியின்றி அர்னாப் கைதுக்கு இடைக்காலத் தடை வழங்கக் கோரி சால்வே வாதிட்டார். அர்னாப் ஒன்றும் முக்கியமான நபர் இல்லை, அவர் ஒரு சாதாரண நபர் தான் என்றும் அவரது பெயர் எஃப்.ஐ.ஆரில் கூட இல்லாதஅளவிற்கு ஒரு பத்திரிகையாளராக அவருக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கக் கூடாது என்றும் சிபில் கூறியுள்ளார். ஆரம்பகால விசாரணையிலேயே “ஏமாற்றும் நோக்கத்தைக் காரணம் காட்டுவது எந்தவொரு இடைக்காலத் தடைக்கும் அடிப்படையாக இருக்க முடியாது என்றும் சிபில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.